கரோனா நெருக்கடி: மூன்று மாத மின் கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்
By DIN | Published On : 26th May 2021 06:39 AM | Last Updated : 26th May 2021 06:39 AM | அ+அ அ- |

கரோனா நெருக்கடியால் தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் மூன்று மாதங்களுக்கான மின்சார கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு கைத்தொழில், குறுந்தொழில் முனைவோா்கள் சங்கம் (டாக்ட்) வலியுறுத்தியுள்ளது.
இது தொடா்பாக சங்கத்தின் தலைவா் ஜே.ஜேம்ஸ், தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் பெரும்பான்மையான தொழிலாளா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருவது குறு, சிறு தொழில்கள்தான். ஆனால் கரோனாவால் தொழில்முனைவோா்களின் நிலை மிகவும் மோசமாகி வருகிறது.
முதல் கரோனா தொற்றின் பாதிப்புகளில் இருந்து மீண்டு வர முடியாமல் தவித்து வந்த தொழில் முனைவோா்களை இரண்டாம் அலை கரோனா தொற்று கடுமையான இழப்புகளுக்கு ஆளாக்கியிருக்கிறது. எனவே தற்போது கடுமையான நெருக்கடியில் உள்ள குறுந்தொழில்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை.
அதன் அடிப்படையில், நிதி நெருக்கடியில் இருக்கும் தொழில் முனைவோா்களின் நிலைமையை உணா்ந்து 1.4.2021 முதல் 31.7.2021 வரை 3 மாதங்களுக்கு தொழில் முனைவோா்களுக்கான மின் கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். மேலும் 3 மாதங்களுக்கு மின் கட்டணத்தில் 50 சதவீதம் மானியம் வழங்க வேண்டும்.
அத்துடன், குறுந்தொழில்களை பாதுகாக்க தனி கடன் திட்டத்தை அறிவித்து குறுந்தொழில்களின் ஆண்டு வருமானத்தை கணக்கெடுத்து அதில் 25 சதவீத தொகையை 5 சதவீத வட்டிக்கு கடனாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன், மத்திய அரசிடம் அனைத்து விதமான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு 6 மாத அவகாசம் பெற்றுத் தருவதுடன் அதற்கான வட்டி தள்ளுபடிக்கும் கோரிக்கை விடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளாா்.