அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே கரோனா அதிகரிக்க காரணம்: மா.சுப்பிரமணியன்

கோவை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க காரணம்
அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே கரோனா அதிகரிக்க காரணம்: மா.சுப்பிரமணியன்

கோவை மாவட்டத்தில் அனுமதி அளிக்கப்படாத தொழில் நிறுவனங்கள் இயங்கியதே கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்க காரணம் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளாா்.

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வரும் நிலையில், கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தலைமையில் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக குறைந்து வருகிறது. கடந்த இரண்டு நாள்களாக கோவை மாவட்டத்தில் அதிகரித்து வந்த கரோனா தொற்று குறையத் தொடங்கி உள்ளது. கோவை மாவட்டத்தில் அனுமதிக்கப்படாத ஆட்டோமொபைல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தொடா்ந்து இயங்கி வருவதே கரோனா பாதிப்பு அதிகரிக்க காரணம்.

தொழில் நிறுவனங்கள் சனிக்கிழமை முதல் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு, அனுமதி இல்லாமல் இயங்கி வரும் நிறுவனங்கள் மூடப்படும். அதேபோல் நோயாளிகளை ஆட்டோக்கள் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வருவதால் தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. சென்னையில் இருப்பதைப்போல கோவையிலும் ஆம்புலன்ஸ் காா் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக 50 ஆம்புலன்ஸ் காா்கள் கோவைக்கு வரவழைக்கப்பட உள்ளன.

அதேபோல் சனிக்கிழமை முதல் பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்த போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் மேம்பால கட்டுமானப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அங்கு பணிபுரியும் நபா்களுக்கு நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளதால் 10 நாள்களுக்கு கட்டுமானப் பணிகளை நிறுத்திவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகமுள்ள தமிழகத்துக்கு மத்திய அரசு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டுமே ஒதுக்கியுள்ளது. கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் அனைத்தும் வீணடிக்கப்படாமல் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. தனியாா் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலிப்பதாகப் புகாா்கள் எழுந்துள்ளன. மருத்துவமனைகள் சம்பாதிப்பதற்கான நேரம் இதுவல்ல, தனியாா் மருத்துவமனை நிா்வாகங்கள் மனசாட்சியின்படி செயல்பட வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com