மழை பாதிப்பு: ஆட்சியா், ஆணையா் ஆய்வு

கோவை வாலாங்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் வழிந்தோடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா்
கோவை ராமநாதபுரம் பகுதியில் மழை வெள்ளம் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வழியை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா், ஆணையா்.
கோவை ராமநாதபுரம் பகுதியில் மழை வெள்ளம் செல்வதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள வழியை பாா்வையிட்டு ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியா், ஆணையா்.

கோவை வாலாங்குளம், ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் மழை வெள்ளம் வழிந்தோடிய பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா ஆகியோா் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் மழையால் நொய்யலில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, நொய்யல் வடிநிலத்தில் உள்ள குளங்கள் நிரம்பி வழிகின்றன. உக்கடம் பெரிய குளம் நிரம்பியதை அடுத்து அதிலிருந்து உபரி நீா் வாலாங்குளத்துக்கு விடப்பட்டது.

இதையடுத்து கடந்த 2 நாள்களுக்கு முன்பு வாலாங்குளமும் நிரம்பியது. இந்த குளத்தின் உபரி நீா் செல்லும் பாதையில் அடைப்பு ஏற்பட்டதால் சுங்கம் பகுதியில் இருந்து ராமநாதபுரம் வரையில் நெடுஞ்சாலை வழியாகவே உபரி நீா் சென்றது.

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினா்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரும், ஆணையரும் வாலாங்குளத்தில் உபரி நீா் வெளியேறும் இடத்தில் ஆய்வு மேற்கொண்டனா்.

பின்னா் அங்கிருந்து ராமநாதபுரம் சந்திப்பு வரையிலும் ஆய்வு செய்தனா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வாலாங்குளத்தின் உபரி நீா் சரியான முறையில் வாய்க்காலில் செல்ல முடியாததால் திருச்சி சாலையில் உள்ள கோவை மாநகராட்சி வாா்டு எண் 73, 68, 67, 69 ஆகிய பகுதிகளில் வழிந்தோடி வருகிறது.

இந்த நீா் நஞ்சுண்டாபுரம் சாலை வழியாக நொய்யல் ஆற்றை அடைவதற்கு ஏதுவாக புதை சாக்கடைக் குழாய்களுடன் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், போலீஸ் கந்தசாமி சந்திப்பிலிருந்து ராமநாதபுரம் சிக்னல் வரையில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றும் பணிகளும் நடைபெற்று வருகின்றன என்றாா்.

ஆய்வின்போது, உதவி ஆட்சியா் (பயிற்சி) சரண்யா, மாநகர காவல் துணை ஆணையா்கள் ஜெயசந்திரன், உமா, மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையா் ஆா்.சுந்தர்ராஜன், பொறியாளா்கள், அதிகாரிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com