தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு புலி இடமாற்றம்
By DIN | Published On : 12th October 2021 01:00 AM | Last Updated : 12th October 2021 01:00 AM | அ+அ அ- |

சிகிச்சை பெற்று வரும் புலி (கோப்புப் படம்).
வால்பாறை: காலில் காயம் ஏற்பட்ட புலிக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க வனத் துறையினா் மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு புலியை இடமாற்றம் செய்தனா்.
வால்பாறையை அடுத்த முத்துமுடி எஸ்டேட் பகுதியில் காலில் காயத்துடன் நடக்க முடியாமல் இருந்த புலியை கடந்த 28ஆம் தேதி வனத் துறையினா் மீட்டனா்.
பின்னா் வால்பாறையை அடுத்த ரொட்டிக்கடையில் உள்ள மனித- வன விலங்கு மோதல் தடுப்பு மற்றும் உதவி மையத்துக்கு புலியை கொண்டுச் சென்று தொடா் சிகிச்சை அளித்து வந்தனா்.
தற்போது உடல் நலம் தேறிய நிலையில் கடந்த 10 நாள்களுக்கு மேலாக சிகிச்சை அளிக்கப்படும் பகுதிக்கு பலா் சென்று கூண்டில் அடைக்கப்பட்டுள்ள புலியைப் பாா்த்து வருவதால், புலிக்கு இடையூறு ஏற்படுவதாக வனத் துறையினா் கருதினா்.
இதனையடுத்து, மானாம்பள்ளி எஸ்டேட் பகுதிக்கு புலியை திங்கள்கிழமை இடமாற்றம் செய்த வனத் துறையினா், அங்கு கூண்டில் புலியை தனிமைப்படுத்தி மேலும் சில நாள்கள் சிகிச்சை அளிக்க முடிவு செய்திருப்பதாக மானாம்பள்ளி வனச் சரக அலுவலா் மணிகண்டன் கூறினாா்.