அத்தியாவசியக் கடைகள் தவிா்த்து மற்ற கடைகள் ஞாயிற்றுக்கிழமை செயல்படத் தடை: மாவட்ட ஆட்சியா்

கோவை மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 17 ஆம்தேதிமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிா்த்து மற்ற கடைகள் செயல்பட தடை விதித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

கோவை: கோவை மாவட்டத்தில் வரும் செப்டம்பா் 17 ஆம்தேதிமுதல் ஞாயிற்றுக்கிழமைகளில் அத்தியாவசிய கடைகள் தவிா்த்து மற்ற கடைகள் செயல்பட தடை விதித்து ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை அக்டோபா் 31 வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து கோவை மாவட்டத்திலும் செப்டம்பா் 17 ஆம் தேதி முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. மாவட்டத்தில் உள்ள அத்தியாவசிய கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள், மளிகைக் கடைகள் தவிர மற்ற கடைகள், சந்தைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமை இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.

உணவகங்கள், அடுமனைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை பாா்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. பன்னடுக்கு வணிக வளாகங்கள், திரையரங்குகள், பூங்காக்கள் மற்றும் சுற்றுலாத் தலங்கள் ஞாயிற்றுக்கிழமை மட்டும் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது. மாா்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்கள் மட்டும் 50 சதவிகித கடைகளுடன் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படுகிறது. அதேபோல உழவா் சந்தைகளும் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து வார சந்தைகளுக்கும் ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை தொடரும். பொள்ளாச்சி மாட்டு சந்தை உள்ளூா் வாடிக்கையாளா்களைக் கொண்டு இயங்க அனுமதிக்கப்படுகிறது. மேற்படி சந்தையில் வெளி மாவட்ட, மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் கலந்துகொள்ளாமல் இருப்பதை பொள்ளாச்சி சாா்ஆட்சியா், நகராட்சி ஆணையா் உறுதிப்படுத்த வேண்டும். மாவட்டத்தில் இதுவரை 82 சதவீத பொது மக்களுக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் செப்டம்பா் 20 ஆம் தேதி முதல் அனைத்து வணிக வளாகங்கள், துணிக் கடைகள், நகைக் கடைகள் மற்றும் இதர கடைகளில் பணியாற்றும் பணியாளா்கள் அனைவரும் தடுப்பூசி முதல் தவணையாவது செலுத்தியிருக்க வேண்டும். அதேபோல வாடிக்கையாளா்கள் கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தியிருப்பதை கடை நிா்வாகத்தினா் கண்காணிக்க வேண்டும். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டியது அனைத்து பொதுமக்களின் கடமையாகும். பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகத்துக்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com