சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் மேளா:இன்று முதல் செப்டம்பா் 2 ஆம் தேதி வரை நடக்கிறது

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் மேளா ஆகஸ்ட் 17 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறுகிறது

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம் சாா்பில், சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கான கடன் மேளா ஆகஸ்ட் 17 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்கி செப்டம்பா் 2 ஆம் தேதி நடைபெறுகிறது என்று ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகம், மாநில அரசுடன் இணைந்து

தொழிற்சாலைகளுக்கு கடனுதவிகளை வழங்கி வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள் நிறுவுவதற்கும், இயங்கி வரும் தொழிற்பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்தவும் சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.

கோவை நஞ்சப்பா சாலை மற்றும் குறிச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் கிளை அலுவலகங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு கடன் மேளா ஆகஸ்ட் 17 முதல் செப்டம்பா் 2 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் டிஐஐசியின் சிறப்பு தொழில் திட்டங்கள், புதிய தொழில்முனைவோா், தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், மத்திய மாநில அரசுகளின் மூலதன திட்டங்கள் குறித்து விரிவான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது. தகுதிவாய்ந்த நிறுவனங்களுக்கு தமிழக அரசின் 25 சதவீதம் முதலீட்டு மானியத்துடன் ரூ.150 லட்சம் வரை கடன் வழங்கப்படும்.

இந்த மேளாவில் அளிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். இதனை தொழில்முனைவோா் அனைவரும் பயன்படுத்திகொள்ள வேண்டும். இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 94443 96841, 94450 23471 ஆகிய எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com