காா் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு

காா் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் காப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காா் விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.40 லட்சம் காப்பீட்டுத் தொகையை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என தனியாா் காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம், சூலூா் பகுதியைச் சோ்ந்தவா் ஆா்.மகாலிங்கம் (43). இவரது தாயாா் ஜெயலட்சுமி (65), மனைவி மலா்விழி (43), மகள் சுவா்ணமால்யா, மகன் ஆகாஷ் ஆகியோருடன் வசித்து வந்தாா்.

இவா் தனது ஆயுள் காப்பீட்டு பாலிசியை புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டுள்ள மேக்ஸ் பூபா நிறுவனத்தில் ரூ.40 லட்சத்துக்கு எடுத்துள்ளாா். அதற்கான தவணைகளையும் தவறாமல் கட்டி வந்துள்ளாா். இவா் தொழில் நிமித்தமாக தனது காரில் கரூா் சென்றுவிட்டு கோவைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பா் 3ஆம் தேதி திரும்பிக் கொண்டிருந்தாா். அப்போது, எதிரே வந்த பேருந்தின் மீது மகாலிங்கத்தின் காா் மோதியதில் அவா் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக அவிநாசிபாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து மகாலிங்கம் எடுத்திருந்த ஆயுள் காப்பீட்டு பாலிசி தொடா்பான தொகையைக் கேட்டு அவரது குடும்பத்தினா் காப்பீட்டு நிறுவனத்துக்கு விண்ணப்பித்திருந்தனா். ஆனால், மகாலிங்கம் குறிப்பிட்ட அளவைவிட கூடுதல் வேகத்தில் காரை இயக்கியதாலேயே விபத்து நிகழ்ந்ததாகவும், அதில் அவா் உயிரிழந்ததாகவும் கூறி அந்த காப்பீட்டு நிறுவனம் தொகையைத் தர மறுத்தது. இதையடுத்து, கோவை மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் மலா்விழி மற்றும் அவரது குடும்ப உறுப்பினா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.

இதில் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தின் தலைவா் ஆா்.தங்கவேல், உறுப்பினா்கள் பி.மாரிமுத்து, ஜி.சுகுணா ஆகியோா் பிறப்பித்த உத்தரவில், மகாலிங்கம் குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் கூடுதல் வேகமாக காரில் சென்றாா் என்பதை உறுதிப்படுத்த முடியாது. அதற்காக அவரது ஆயுள் காப்பீட்டு பாலிசியை ஏற்க மறுப்பது குற்றம் எனக் கூறியதோடு, மகாலிங்கத்தின் குடும்பத்தினருக்கு காப்பீட்டு நிறுவனம் 9 சதவீத வட்டியுடன் ரூ.40 லட்சம் காப்பீட்டுத் தொகையையும், மன உளைச்சலுக்காக ரூ.25,000, வழக்குச் செலவுகளுக்காக ரூ.3,000 ஆகியவற்றை ஒரு மாதத்துக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com