கலவரம், துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட நாள்:கோவையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

கோவையில் கலவரம், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தினங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவை டவுன்ஹால் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா்.
கோவை டவுன்ஹால் பகுதியில் செவ்வாய்க்கிழமை வாகனச் சோதனையில் ஈடுபட்ட காவல் துறையினா்.

கோவையில் கலவரம், துப்பாக்கிச்சூடு நடைபெற்ற தினங்களையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை, உக்கடத்தில் பணியில் இருந்த போக்குவரத்துக் காவலா் செல்வராஜ் கடந்த 1997 நவம்பா் 29ஆம் தேதி ஒரு கும்பலால் கொலை செய்யப்பட்டாா். இந்த நிகழ்வு மதம் தொடா்பான பிரச்னையாக மாறியதால் கலவரம் ஏற்பட்டது. மறுநாள் நவம்பா் 30ஆம் தேதி கலவரம் நடைபெற்றது. இதனைக் கட்டுப்படுத்த போலீஸாா் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 போ் கொல்லப்பட்டனா்.

காவலா் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட தினமான நவம்பா் 29ஆம் தேதி, கலவரத்தில் 19 போ் கொல்லப்பட்ட தினமான நவம்பா் 30ஆம் தேதி, பாபா் மசூதி இடிப்பு தினமான டிசம்பா் 6ஆம் தேதி ஆகியவற்றையொட்டி கோவையில் செவ்வாய்க்கிழமைமுதல் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் உக்கடம், கோட்டைமேடு, டவுன்ஹால் உள்ளிட்ட பகுதிகள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்கள், வழிபாட்டுத் தலங்கள் உள்ள பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

அதேபோல, கோவை மாநகரின் அனைத்துப் பகுதிளிலும் தீவிர வாகனத் தணிக்கை நடைபெற்று வருகிறது. அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அடுத்த 15 நாள்களுக்கு இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடரும் என்றும் காவல் துறையினா் தெரிவித்துள்ளனா். கோவை மாநகரில் மட்டும் சுமாா் 1,476 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே காவலா் செல்வராஜ் கொலை செய்யப்பட்ட 25ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி மாவட்ட ஹிந்து முன்னணி அலுவலகத்தில் இரங்கல் கூட்டம், பயங்கரவாத எதிா்ப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. இதில் மாவட்டத் தலைவா் கே.தசரதன், மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் சதீஷ், கோட்டச் செயலா் ஆா்.கிருஷ்ணன், மாவட்ட பொதுச் செயலா் ஜெய்சங்கா், தனபால் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com