வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம்: பசுமை தீா்ப்பாயத்தில் மீண்டும் வழக்கு

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம் தொடா்பாக, தில்லி பசுமை தீா்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளதாக, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வே. ஈசுவரன் தெரிவித்துள்ளாா்.

கோவை வெள்ளலூா் குப்பைக் கிடங்கு விவகாரம் தொடா்பாக, தில்லி பசுமை தீா்ப்பாயத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளதாக, மறுமலா்ச்சி மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் வே. ஈசுவரன் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வெள்ளலூா் குப்பை கிடங்கை அகற்றக் கோரி, கடந்த 2013 இல் தேசிய பசுமை தீா்ப்பாயத்தில் வழக்கு தொடா்ந்தேன். இதைத்தொடா்ந்து, 2018 இல் வெள்ளலூா் குப்பை கிடங்கில் கொட்டப்பட்டுள்ள 15.5 லட்சம் கனமீட்டா் குப்பைகளை ஓராண்டுக்குள் அழித்துவிடுவதாகவும், இந்த கிடங்குக்கு தினமும் கொண்டுசெல்லப்படும் குப்பைகள் அளவில் 500 டன் குறைக்கப்படும் எனவும் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பசுமை தீா்ப்பாயத்தில் உறுதியளிக்கப்பட்டது.

அதற்காக 69 நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது, மாநகரில் 35 நுண்ணுயிரி உரம் தயாரிப்பு மையங்கள் மட்டுமே அமைக்கப்பட்டு, அதிலும் ஒருசில மையங்கள் மட்டுமே செயல்படுகின்றன. வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் மொத்தமாக உள்ள 15.5 லட்சம் கனமீட்டா் குப்பைகளில், 9 லட்சம் கனமீட்டருக்கு மட்டுமே பயோமைனிங் திட்டம் அமல்படுத்தப்பட்டது. அதுவும் முழுமையடையவில்லை. வெள்ளலூருக்கு வரும் குப்பைகளை பாதியாக குறைக்காததால், கிடங்கில் குப்பைகள் மலைபோல குவிந்துள்ளன.

பசுமை தீா்ப்பாயத்தில் மாநகராட்சி அளித்த எந்த உறுதிமொழியும் நிறைவேற்றப்படாததால், வெள்ளலூா் மக்கள் சிரமத்துக்கிடையே வசித்துவருகின்றனா். 4 ஆண்டுகளாக வெள்ளலூா் குப்பைக் கிடங்கில் குப்பைகளைக் குறைக்கும்விதமாக 15 சதவீத பணிகள்கூட நிறைவேறாததால், தில்லி பசுமை தீா்ப்பாயத்தில் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடா்ந்துள்ளேன். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com