கொடநாடு கொலை வழக்கு: அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுகுட்டியிடம் விசாரணை

கொடநாடு கொலை வழக்கு தொடா்பாக அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுகுட்டியிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
Updated on
1 min read

கொடநாடு கொலை வழக்கு தொடா்பாக அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுகுட்டியிடம் போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

நீலகிரி மாவட்டம், கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான தேயிலை எஸ்டேட், பங்களா உள்ளது. அங்கு 2017 ஏப்ரல் 24ஆம் தேதி இரவுப் பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்ததுடன் எஸ்டேட்டுக்குள் நுழைந்து பொருள்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்துச் சென்றது.

இந்தச் சம்பவம் தொடா்பாக ஜெயலலிதாவின் காா் ஓட்டுநரான சேலம் மாவட்டம், எடப்பாடி பகுதியைச் சோ்ந்த கனகராஜ் உள்பட பலா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில் சம்பவம் நடந்த சில நாள்களிலேயே சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே சந்தனகிரி என்ற இடத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் ஓட்டுநா் கனகராஜ் உயிரிழந்தாா்.

இந்நிலையில் இந்த வழக்கில் 103 நபா்கள் விசாரணை வளையத்துக்குள் இருந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோரிடம் மறு விசாரணை நடந்து முடிந்துள்ளது.

5 ஆண்டுகளாக விசாரணை நடைபெற்று வரும் இந்த வழக்கில் விசாரணையைத் தீவிரப்படுத்துவதற்காக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கோவை, சேலம், நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

விசாரணையின் ஒரு பகுதியாக சசிகலாவின் அண்ணன் மகன் விவேக்கிடம் கடந்த ஆண்டு டிசம்பா் 22ஆம் தேதி சுமாா் 5 மணி நேரத்துக்கும் மேலாக கோவையில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இந்நிலையில் கொடநாடு கொலை வழக்குத் தொடா்பாக அதிமுக முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் வி.சி.ஆறுகுட்டியிடம் கோவை காவலா் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தப்பட்டது. ஆறுகுட்டியிடம் 3 ஆண்டுகளுக்கு முன்னா் ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவா் மீண்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளாா். ஜெயலலிதாவின் காா் ஓட்டுநராக இருந்த உயிரிழந்த கனகராஜ், ஆறுகுட்டியிடமும் சில காலம் காா் ஓட்டுநராகப் பணியாற்றியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com