தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை: செல்லமுத்து
By DIN | Published On : 02nd July 2022 02:59 PM | Last Updated : 02nd July 2022 02:59 PM | அ+அ அ- |

கோவை: தமிழக அரசு விவசாயிகளுக்கு அறிவித்த சலுகை இன்னும் வந்து சேரவில்லை என்று தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு விவசாய சங்கம் உழவர் உழைப்பாளர் கட்சி தலைவர் செல்லமுத்து, கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலத்தில் மின் கட்டண குறைப்பு மற்றும் கடன் நிவாரணம் கோரியும் நடத்தப்பட்ட போராட்டத்தில், உயிரிழந்தவர்களுக்கு ஜூலை 5-ம் தேதி தியாகிகள் தினமாக அனுசரிக்கபட்டு வரும் நிலையில், இவ்வாண்டு தொண்டாமுத்தூர் பகுதியில் அந்நிகழ்வு அனுசரிக்கப்படுகிறது என தெரிவித்தார்.
மேலும் அந்நிகழ்வில் பல்வேறு விவசாய பொருட்கள் விலை குறைவிற்கு அரசு நிவாரணம் கிடைக்கவில்லையென்றால் போராட்ட அறிவிப்பை அறிவிக்க உள்ளதாகவும் கூறினார். மேலும் மழை காலங்களில் தூர்வாரப் படாத இடங்களையெல்லாம் தூர்வார வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்த கூட்டத்திற்கு அனைத்து விவசாயிகளும் தவறாமல் வந்து கலந்து கொள்ள வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மேலும், தமிழக அரசு வெறும் விளம்பர அரசாகத்தான் இருக்கிறது எனவும், விவசாயிகளுக்காக பட்ஜெட் போடுவதாக கூறும் போது அதனை வரவேற்றதாகவும், ஆனால் இதுவரை விவசாயிகளில் நிலத்திற்கு ஒரு ரூபாய் சலுகை கூட வரவில்லை என்பது தான் உண்மை என தெரிவித்தார். மேலும் பம்புசெட் உற்பத்தியாளர்களுக்கு ஜிஎஸ்டி வரியை உயரத்தினால் அது விவசாயிகள் தலையில் தான் விடியும் என்றும் பம்புசெட் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டுமென கேட்டுகொள்வதாக தெரிவித்தார்.