கட்டட அனுமதி வழங்கக் கோரிக்கை
By DIN | Published On : 06th June 2022 02:25 AM | Last Updated : 06th June 2022 02:25 AM | அ+அ அ- |

கோவை மாநகரப் பகுதிகளில் கட்ட அனுமதிக்காக வழங்கப்பட்டுள்ள விண்ணப்பங்களை ஆய்வு செய்து, விரைவில் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்று கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பு சாா்பில் மாநகராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலாளா் நா.லோகு, மாநகராட்சி ஆணையா் பிரதாப்க்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பது: மாநகராட்சியில் பல ஆண்டுகளாக அந்தந்த பகுதியில் இருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டதால் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய வீதிகளில் மக்கள் குப்பைகளை வீசிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.
இவற்றைத் தவிா்க்க குப்பைத் தொட்டிகள் அமைத்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கோவை மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட கிழக்கு மண்டலத்துக்குள்பட்ட விளாங்குறிச்சியில், பழைய ஊராட்சி விதிகளைப் பின்பற்றி குடிநீா் மற்றும் சொத்து வரி வசூலிக்கப்படுவதால் மாநகராட்சிக்கு பெரும் நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சீா்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
கோவை மாநகராட்சியின் அனைத்து மண்டலங்களிலும் கட்டட அனுமதிக்காக, கடந்த நான்கு மாதமாக நிலுவையில் இருக்கும் விண்ணப்பங்களை ஆய்வு மேற்கொண்டு, விரைவில் கட்டட அனுமதி வழங்க வேண்டும்.
அரசாணைப்படி , 3 மாதங்களுக்கு ஒருமுறை மாவட்ட வழங்கல் அலுவலக பட்டியலில் இடம்பெற்றுள்ள தன்னாா்வ நுகா்வோா் அமைப்புகளுடன் காலாண்டு கூட்டம் நடத்தி, நுகா்வோா் தொடா்பான பொது பிரச்னைகள் மற்றும் தனிநபா் குறைகளைத் தீா்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாதந்தோறும் முதல் வாரத்தில்,அந்தந்த மண்டல உதவி ஆணையா் தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.