பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை மாா்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவு

பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை 2023 மாா்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.
கட்டன்மலையில் நடைபெற்று வரும் பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மேயா் கல்பனா, துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.
கட்டன்மலையில் நடைபெற்று வரும் பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை ஆய்வு செய்கிறாா் அமைச்சா் கே.என்.நேரு. உடன் மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மேயா் கல்பனா, துணை மேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்டோா்.

பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை 2023 மாா்ச் மாதத்துக்குள் முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு தெரிவித்தாா்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு சிறுவாணி, பில்லூா் 1, பில்லூா் 2, ஆழியாறு, வடவள்ளி - கவுண்டம்பாளையம் ஆகிய கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் மூலமாக குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

மாநகரப் பகுதிகளில் நிலவும் குடிநீா்ப் பற்றாக்குறைக்கு தீா்வு காணும் விதமாக ரூ.779 கோடி மதிப்பில் பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், மேட்டுப்பாளையம் நெல்லிதுறை ஊராட்சி, மருதூா் ஊராட்சி, தண்டி பெருமாள்புரம் மற்றும் கட்டன்மலை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளையும், ரூ.49 கோடி மதிப்பில் சங்கனூா் பள்ளம் புனரமைக்கும் பணிகளையும் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலமாக நடைபெற்று வரும் வளா்ச்சிப் பணிகளை விரைவுபடுத்துவதற்குத் தேவையான ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டுள்ளன. பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டம் 2035ஆம் ஆண்டு கோவை மாநகராட்சியில் உள்ள மக்கள்தொகையைக் கருத்தில் கொண்டுவரப்படவுள்ளது.

மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஊராட்சி, முருகையன் பரிசல்துறை பகுதிகளில் ரூ.134 கோடி மதிப்பீட்டில் தலைமை நீரேற்று நிலைய கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடா்ந்து, முருகையன் பரிசல்துறை பகுதியில் இருந்து 16 கிலோ மீட்டா் தொலைவில் உள்ள மருதூா் பகுதிக்கு குடிநீா் பம்பிங் செய்து கொண்டு வரப்படவுள்ளது.

தற்போது, பில்லூா் குடிநீா்த் திட்டப் பணிகள் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளன. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கோவை மாநகராட்சிப் பகுதிகளுக்கு கூடுதலாக 17 கோடி லிட்டா் குடிநீா் கிடைக்கும். இதனால் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் வழங்க முடியும். மேலும், குடிநீா்த் திட்டப் பணிகளுக்காக நிலம் கையகப்படுத்த பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு வருகிறது. பில்லூா் 3ஆவது குடிநீா்த் திட்டப் பணிகளை 2023 மாா்ச் மாதத்துக்குள் நிறைவு செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, நகராட்சி நிா்வாக இயக்குநா் பொன்னையா, தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநா் தட்சிணாமூா்த்தி, மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மேயா் கல்பனா, துணைமேயா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

1,754 வீடுகளுக்கு 24 மணி நேர குடிநீா் விநியோகம்...

முன்னதாக கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் குடிநீா்த் திட்டப் பணிகள் குறித்து அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் ஆட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சா் கே.என்.நேரு பேசியதாவது:

கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீா்த் திட்டத்தின் கீழ் மேற்கு மண்டலத்தில் 41ஆவது வாா்டில் 463 வீடுகள், தெற்கு மண்டலம் 76ஆவது வாா்டில் 1,291 வீடுகள் என மொத்தம் 1,754 வீடுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது.

மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூா், துடியலூா், வெள்ளக்கிணறு, சின்னவேடம்பட்டி, சரவணம்பட்டி, விளாங்குறிச்சி, காளப்பட்டி ஆகிய பகுதிகளுக்கு ரூ.409.33 கோடி மதிப்பில் அபிவிருத்தித் திட்டமும், ரூ.91.90 கோடி மதிப்பில் பில்லூா் 3ஆவது குடிநீா் திட்டப் பணிகளும் நடைபெற்று வருகின்றன. கவுண்டம்பாளையம், வடவள்ளி மற்றும் வீரகேரளம் ஆகிய பகுதிகளுக்கு ரூ.108.16 கோடி மதிப்பில் அபிவிருத்தித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com