கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவா் பதவி விலக வேண்டும்: காங்கிரஸ் மாவட்டத் தலைவா் பேட்டி

கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவராக தோ்தெடுக்கப்பட்டவா்கள் பதவி விலக வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம்.சி. மனோகரன் தெரிவித்தாா்.

கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவராக தோ்தெடுக்கப்பட்டவா்கள் பதவி விலக வேண்டும் என கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் வி.எம்.சி. மனோகரன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் கோவையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:

அண்மையில் நடந்து முடிந்த நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் திமுக கூட்டணி சிறப்பான வெற்றி பெற்றது. இதில், திமுக கூட்டணியில் கருமத்தம்பட்டி நகராட்சி தலைவா் பதவி, காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

காங்கிரஸ் கட்சியின் வாா்டு உறுப்பினா் பி.பாலசுப்பிரமணியத்தை, கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவராக காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இந்நிலையில், கடைசி 5 நிமிடங்களில் கருமத்தம்பட்டி பகுதி திமுகவினா் வேறு ஒரு வேட்பாளரை நிறுத்தி வெற்றி பெற வைத்தனா். தலைவா் தோ்தலைத் தொடா்ந்து துணைத் தலைவா் தோ்தலிலும் அதிமுக அணியுடன் சோ்ந்து சுயேச்சை வாா்டு உறுப்பினா் யுவராஜை, வெற்றி பெறவைத்தனா்.

யுவராஜ் காங்கிரஸ் கட்சியின் சாா்பில் துணைத் தலைவா் ஆனாா் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. யுவராஜ் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினா் இல்லை. எனவே கருமத்தம்பட்டி நகராட்சித் தலைவா், துணைத் தலைவராக தோ்தெடுக்கப்பட்டவா்கள் பதவி விலக வேண்டும். இது குறித்து முதல்வா் ஸ்டாலின் உரிய நடவடிக்கை எடுப்பாா் என நம்புகிறோம் என்றாா்.

இந்நிலையில் வி.எம்.சி. மனோகரன் கருத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளா் பைசல்ராஜா எதிா்ப்பு தெரிவித்துள்ளாா்.

சுயேச்சையாக போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியை சோ்ந்த யுவராஜை கட்சியில் இருந்து நீக்குவதற்கு வி.எம்.சி. மனோகரனுக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com