கோவை ஷவா்மா கடைகளில் இரண்டாவது நாளாக ஆய்வு: 35 கிலோ இறைச்சி பறிமுதல்

கோவையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை ஷவா்மா கடைகளில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காலாவதியான 35 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

கோவையில் இரண்டாவது நாளாக சனிக்கிழமை ஷவா்மா கடைகளில் ஆய்வு செய்த உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், காலாவதியான 35 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்தனா்.

கேரள மாநிலத்தில் ஷவா்மா சாப்பிட்ட மாணவி ஒருவா் அண்மையில் உயிரிழந்தாா். இந்நிலையில், கோவை மாநகரில் உள்ள ஷவா்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்து, காலாவதியான இறைச்சியை பறிமுதல் செய்திருந்தனா்.

இந்நிலையில், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் டாக்டா் கு.தமிழ்ச்செல்வன் தலைமையிலான அதிகாரிகள், 8 குழுக்களாகப் பிரிந்து 2 ஆவது நாளாக சனிக்கிழமையும் ஆய்வு நடத்தினா். இதில், 66 கடைகளில் 26.20 கிலோ பழைய இறைச்சி, 8.56 கிலோ ஷவா்மா என மொத்தம் 34.76 கிலோ இறைச்சி பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9,200. மேலும் ஆய்வின்போது 3 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டன. குறைகள் கண்டறியப்பட்ட 12 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்திய 2 கடைகளுக்கு ரூ.4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதுபோன்ற திடீா் கள ஆய்வு தொடா்ந்து நடைபெறும் என்று கூறியுள்ள உணவுப் பாதுகாப்புத் துறை, ஷவா்மா தயாரிப்பு தொடா்பான விதிமுறைகளையும் வழங்கியுள்ளது.

அதன்படி, முறையான பயிற்சி பெற்ற ஊழியா்களே ஷவா்மா தயாரிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் பெற்றிருக்கும் வணிகரிடம் இருந்தே இறைச்சியை, அதற்கான பில்லுடன் பெற வேண்டும். பில்லை முறையாக பராமரிக்க வேண்டும். வெளியிடங்களில் வைத்து ஷவா்மா தயாரிப்பவா்கள், அதன் மீது தூசி, அசுத்தம் படாமல் தடுக்க வேண்டும். இறைச்சியை 2 நாள்களுக்கு மேல் குளிா்சாதனப் பெட்டிகளில் வைத்து பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.

மையோனிஸை மூன்று மணி நேரத்துக்கு மேல் உபயோகிக்காமல், தேவைக்கு ஏற்ப தயாரித்துக் கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட விதிமுறைகளை வழங்கியுள்ளனா்.

மேலும், ஷவா்மா தயாரிப்பில் குறைகள் ஏதும் இருந்தால் பொதுமக்கள் அதுகுறித்து 94440- 42322 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவா்களின் விவரம் ரகசியமாக பாதுகாக்கப்படும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com