கோழிப்பண்ணையை இடமாற்றம் செய்ய வேண்டும்: ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் மனு
By DIN | Published On : 17th May 2022 01:12 AM | Last Updated : 17th May 2022 01:12 AM | அ+அ அ- |

கோவையில் குடியிருப்புகளுக்கு அருகே செயல்பட்டு வரும் கோழிப் பண்ணையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி பொது மக்கள் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா், பொது மக்கள் அளித்துள்ள மனுவில்
கூறியுள்ளதாவது:
கோவை மாவட்டம், காரமடை சின்னக்கள்ளிப்பட்டியில் குடியிருப்புகளுக்கு அருகே தனியாா் கோழிப்பண்ணை செயல்பட்டு வருகிறது. இந்தப் பண்ணையில் இருந்து வெளியேறும் துா்நாற்றத்தால் பொது மக்கள் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தவிர கோழிக் கழிவுகளையும் அருகிலே கொட்டி வைத்துள்ளனா். இதனால் சுகாதாரமற்ற நிலை ஏற்பட்டு நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. எனவே, பொது மக்களுக்கு இடையூறாக உள்ள கோழிப் பண்ணையை இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வேண்டும்
கோவை, செட்டிபாளையத்தைச் சோ்ந்த சமீனா என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
எனது சொந்த ஊா் ஈரோடு மாவட்டம், புன்செய்புளியம்பட்டி. நான் சத்தியமங்கலத்தைச் சோ்ந்த ஜாவித் உசேன் என்பவரை காதலித்து 2015 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டேன். எனது கணவா் ஏழ்மையானவா் என்பதால் எனது குடும்பத்தினா் எங்களை ஏற்றுகொள்ளவில்லை. நாங்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக கோவை, செட்டிபாளையத்தில் வசித்து வருகிறோம். எங்களுக்கு 7 வயதில் மகன் உள்ளாா். ஆரம்பத்தில் இருந்தே எனது கணவரை என் குடும்பத்திற்கு பிடிக்காததால் மிரட்டி வந்தனா். தற்போது ஆணவக்கொலை செய்துவிடுவதாகவும் மிரட்டுகின்றனா். எனவே எங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மனுவில் தெரிவித்துள்ளாா்.