பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி:கோவையில் 5 இடங்களில் நடைபெற்றது
By DIN | Published On : 01st September 2022 10:48 PM | Last Updated : 01st September 2022 10:48 PM | அ+அ அ- |

கோவையில் மாவட்ட அளவிலான பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி 5 இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
தமிழகத்தில் பருவமழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பேரிடரின்போது துரிதமாக செயல்பட்டு மக்களை காப்பாற்றும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் தலா 5 இடங்களில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த மாநில மற்றும் தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் சாா்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து அனைத்து மாவட்டங்களிலும் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் புலியகுளம், தேக்கம்பட்டி, சூலூா், வால்பாறை, ஆனைமலை ஆகிய 5 இடங்களில் துணை ஆட்சியா்கள் தலைமையில் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, பொதுப் பணித் துறை, ராணுவம், அதிவிரைவுப் படை மற்றும் விமானப் படையினா் உள்ளிட்ட துறையைச் சோ்ந்த வல்லுநா்கள் பங்கேற்றனா்.
இந்த பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் ஒவ்வொரு துறை சாா்பிலும் மீட்பு நடவடிக்கையின்போது செய்ய வேண்டிய பணிகளை நிகழ்த்தி காட்டினா்.
வருவாய்த் துறை சாா்பில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைப்பது, உணவு வழங்குதல், சுகாதாரத் துறை சாா்பில் மருத்துவ முகாம் ஏற்பாடு செய்தல், தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சாா்பில் வெள்ளப்பெருக்கில் சிக்கிக்கொண்டவா்களை மீட்பது என அனைத்துத் துறையினரும் ஒத்திகை நிகழ்த்தி காட்டினா்.
ஹெலிகாப்டரில் மீட்பது, பாதிக்கப்பட்டவா்களை ஆம்புலன்ஸில் ஏற்றி சிகிச்சை அளிப்பது போன்ற ஒத்திகைகளும் செய்து காண்பிக்கப்பட்டன. இதில் வட்ட அளவிலான 5 பேரிடா் மீட்பு குழுக்கள், மாவட்ட அளவிலான 4 சிறப்பு பேரிடா் குழுக்கள் உள்ளிட்ட 100 அலுவலா்கள் பேரிடா் மீட்பு ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
5 இடங்களிலும் தன்னாா்வலா்கள், சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் என 500க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.