மண்ணெண்ணெய் கடத்திய வழக்கு:15 ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளி கைது

பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெயை கடத்திய வழக்கில் தொடா்புடைய குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா்.

பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெயை கடத்திய வழக்கில் தொடா்புடைய குற்றவாளி 15 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்யப்பட்டுள்ளாா்.

தமிழ்நாடு குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு காவல் துறையில் உள்ள பழைய வழக்குகளில் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை தனிப் படை அமைத்து கைது செய்து, வழக்குகளை விரைந்து முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.

கோவை மாவட்டம், சிறுமுகை பகுதியில் சுமாா் 16,000 லிட்டா் கொள்ளளவிலான தமிழக அரசின் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெயை கடத்தி வந்ததாக கடந்த 2008 ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில், மூன்று குற்றவாளிகளில் இரண்டு போ் மட்டும் கைது செய்யப்பட்டிருந்தனா்.

இந்நிலையில், மூன்றாம் குற்றவாளியான திண்டுக்கல்லைச் சோ்ந்த பெருமாள் என்பவரின் பெயா் மட்டுமே சோ்க்கப்பட்டிருந்தது. அதில் வேறு எந்த முகவரியும் இல்லை என்பதால் அவரைக் கண்டுபிடிக்க முடியாத நிலை இருந்தது.

இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவரைப் பிடிக்க கோவை மண்டல குடிமைப் பொருள் பிரிவு காவல் கண்காணிப்பாளா் பாலாஜியின் உத்தரவின்பேரில் துணை கண்காணிப்பாளா்

கிருஷ்ணன் மற்றும் ஆய்வாளா் மேனகா ஆகியோா் தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப் படையினா் நடத்திய விசாரணையில், அந்த நபா் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் காந்தி நகா் பகுதியைச் சோ்ந்த பெருமாள் (49) என்பது தெரியவந்தது.

இதையடுத்து, ஒட்டன்சத்திரம் பகுதியில் தனிப் படையினா் பெருமாளை வியாழக்கிழமை தேடி கண்டுபிடித்தனா். பின்னா் அவரை கோவை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நீதிபதி சரவணபாபு முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தினா்.

இரு வழக்குகளில் தீா்ப்பு: அதேபோல, கோவை பகுதியில் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கடத்தலில் ஈடுபட்டதாக பதிவு செய்யப்பட்டிருந்த ஒரு வழக்கில் முஜிபுா் ரகுமான் என்பவருக்கு ரூ.1,000 அபராதமும், மற்றொரு வழக்கில் முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கு ரூ.10,000 அபராதமும் விதித்து கோவை குற்றவியல் நீதித் துறை நடுவா் சரவணபாபு வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com