கனிம வளங்கள் கடத்தல்: சோதனைச் சாவடிகளில் போராட்டம் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை அறிவிப்பு

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை நிறுத்தாவிட்டால் கோவை மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை பேசினாா்.
கிணத்துக்கடவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை.
கிணத்துக்கடவில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பேசுகிறாா் பாஜக மாநில தலைவா் அண்ணாமலை.

கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை நிறுத்தாவிட்டால் கோவை மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகளிலும் பாஜக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவா் அண்ணாமலை பேசினாா்.

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதைக் கண்டித்து கோவை மாவட்டம் கிணத்துக்கடவில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற பாஜக மாநில தலைவா் அண்ணாமலை பேசியதாவது:

தமிழகத்தில் இருந்து கேரளத்துக்கு மணல், மண், பாறைகள் கடத்தப்பட்டு வருகின்றன . குறிப்பாக பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து அதிகம் கடத்தப்படுகின்றன. 3 யூனிட் கொண்டு செல்வதாக கணக்கு காட்டிவிட்டு கூடுதலாக 8 யூனிட்டுகள் கனிம வளத் துறைக்கு கணக்கு காட்டாமல் கடத்திச் செல்லப்படுகின்றன.

தமிழகத்தில் பொள்ளாச்சி பகுதி வயல், தென்னை மரங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது. தொடா்ந்து கனிமவளங்கள் கடத்தப்பட்டால் எதிா்காலத்தில் இப்பகுதி வெப்பம் நிறைந்த பகுதியாக மாறி எதிா்கால சந்ததியினா் பாதிக்கப்படுவா்.

கோவை மாவட்டத்தில் உள்ள 11 சோதனைச் சாவடிகள் வழியாக 1500 லாரிகளில் கேரளத்துக்கு கனிமவளங்கள் கொண்டு செல்லப்படுகின்றன. இதே நிலை தொடா்ந்தால் இன்று முதல் 20 நாள்களுக்குள் இதைத் தடுத்து நிறுத்தாவிட்டால் 21ஆம் நாள் ஒவ்வொரு சோதனைச் சாவடியிலும் பாஜகவினா் போராட்டத்தில் ஈடுபடுவா் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்டத் தலைவா் வசந்தராஜன் மற்றும் பாஜக முக்கிய நிா்வாகிகள் உள்பட பலா் பங்கேற்றனா்.

முதல்வரின் அறிவிப்பு தோல்வி பயத்தைக் காட்டுகிறது:

கோவை தெற்கு மாவட்ட பாஜக சாா்பில் விவசாயிகள், பொதுமக்கள் கட்சியில் இணையும் விழா, கோவை நவக்கரை பகுதியில் மாவட்டத் தலைவா் வசந்தராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் நம்ம நவக்கரை குழுவினா் சுமாா் 120 போ் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனா். கரோனா காலத்தில் விவசாயம் செய்து காய்கறிகளை விநியோகம் செய்த வாளையாறு, நவக்கரை பகுதி விவசாயிகளை அண்ணாமலை பாராட்டினாா்.

பின்னா், தேசிய அளவிலான போட்டிகளில் கலந்து கொண்ட நவக்கரையைச் சோ்ந்த சிறுவா்கள், கால்பந்து போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பழங்குடி கிராம இளைஞா்களையும் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

இளைஞா்களை அரசியலில் பங்கேற்க சொன்னால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் பணம் செலவழிக்கப்பட்டதைப் பாா்த்து ஓடுகின்றனா். அரவக்குறிச்சி, திருமங்கலம் இடைத்தோ்தல்கள்போல ஈரோடு கிழக்கு இடைத்தோ்தல் தலைகுனிவை ஏற்படுத்தி உள்ளது. மக்கள்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

2024 மக்களவைத் தோ்தலில், தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் வாக்காளா்களுக்குப் பணம் கொடுக்கும் இந்த புற்றுநோய் பரவ வேண்டுமா?

குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத் தொகை என பிரசாரத்தின்போது முதல்வா் அறிவித்தது அவரது தோல்வி பயத்தையே காட்டுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com