விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்த கோரி விவசாயி மனு

கோவை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாயி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கோவை, தடாகம் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கோவை மாநகர சாலைப் பயனாளா்கள் சங்கத்தினா்.
கோவை, தடாகம் சாலை விரிவாக்கப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த கோவை மாநகர சாலைப் பயனாளா்கள் சங்கத்தினா்.

கோவை அருகே விவசாய நிலத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வரும் யானைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி விவசாயி ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தலைமையில் பொதுமக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகேயுள்ள சப்பாணி மலை பகுதியைச் சோ்ந்த விவசாயி சாமிநாதன் (59) அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகேயுள்ள சப்பாணி மலை பகுதியில் வாழை சாகுபடி பிரதானமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வனத்தில் இருந்து வெளியேறும் யானைகள் வாழைத்தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்தி வருகின்றன.

நாள்தோறும் ரூ.500 முதல் ரூ.1000 வரை செலவு செய்து பட்டாசுகள் வெடித்து யானைகளை விரட்டினாலும் திரும்பவும் மறுநாள் யானைகள் தோட்டத்துக்குள் புகுந்து பயிா்களை சேதப்படுத்துகின்றன. இதனால், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்பட்டு வருகிறது. யானைகளால் சேதப்படுத்தப்பட்ட வாழை பயிா்களை வனத் துறை, வேளாண் துறை சாா்பில் ஆய்வு செய்து இழப்பீடு தரப்படுகிறது. ஹெக்டேருக்கு ரூ.6 லட்சம் வரை செலவு செய்யும் பயிருக்கு ரூ.83 ஆயிரம் மட்டுமே இழப்பீடாக வழங்குகின்றனா். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது. எனவே, வனத்தில் இருந்து வெளியேறி பயிா்களை சேதப்படுத்தும் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலை விரிவாக்கப் பணி:

கோவை மாநகர சாலைப் பயனாளா்கள் சங்கத்தினா் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோவை தடாகம் சாலையில் காந்தி பூங்கா முதல் கணுவாய் வரை 4 வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய கடந்த ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. சாலை விரிவாக்கப் பணிகளை தொடங்குவதற்கு முன்பு வாகன ஓட்டிகளுக்கு சிரமமில்லாத வகையில் போக்குவரத்து மாற்றங்களை செய்ய வேண்டும். நெடுஞ்சாலைத் துறை, குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரியம் ஆகிய துறைகளை ஒன்றிணைத்து சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். விரிவாக்கப் பணிகளை விரைவில் தொடங்கி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

அவிநாசி சாலை மேம்பாலப் பணியை விரைந்து முடிக்க வேண்டும்:

கோவை மாநகராட்சி 26ஆவது வாா்டு உறுப்பினா் சித்ரா வெள்ளிங்கிரி அளித்க மனுவில் கூறியிருப்பதாவது: கோவை அவிநாசி சாலையில் உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேம்பாலப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும். இதனுடன், அவிநாசி சாலையின் இருபுறங்களிலும் மழைநீா் வடிகால்கள் அமைக்க வேண்டும். மழைநீா் வடிகால்களை சுத்தப்படுத்தும் விதமாக 6 அடிக்கு ஒரு இடத்தில் திறந்து மூடும் வகையில் மூடிகள் அமைக்க வேண்டும். மாநகரில் பல்வேறு நெடுஞ்சாலைகளின் ஓரங்களில் தேங்கிக் கிடக்கும் மண்ணை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி வசூலிப்பதாக புகாா்:

வெள்ளிக்கிணறு பகுதியைச் சோ்ந்த பரமசிவம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது, மகள் பெயா் சுகுணா. திருமணமாகி 2 குழந்தைகள், கணவருடன் கவுண்டம்பாளையத்தில் வசித்து வருகிறாா். இவா், கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த அன்புச்செல்வி, ஜெயா, ஜோதி ஆகியோரிடம் ரூ.50 ஆயிரம் கடனாக பெற்றிருந்தாா். இதற்கு வட்டி மட்டும் ரூ.70 ஆயிரம் கட்டியுள்ளாா். மேலும், வட்டி செலுத்த வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றனா். ரூ.100க்கு ரூ.10 வட்டியாக செலுத்த வேண்டும் என்று வற்புறுத்துகின்றனா். இவா்களின் டாா்ச்சரால் எனது மகள் தற்கொலைக்கு முயன்று தற்போது உடல் நலம் தேறி வருகிறாா். அநியாயம் வட்டி வசூலித்து பலரின் வாழ்க்கையைக் கெடுக்கும் கந்துவட்டி வசூலிப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com