மாநகராட்சியில் குடியரசு தினவிழா: சிறந்த 10 வாா்டு உறுப்பினா்களுக்கு விருது

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறந்த 10 வாா்டு உறுப்பினா்களுக்கு மேயா் கல்பனா விருதுகள் வழங்கி கௌரவித்தாா்.

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சிறந்த 10 வாா்டு உறுப்பினா்களுக்கு மேயா் கல்பனா விருதுகள் வழங்கி கௌரவித்தாா்.

கோவை மாநகராட்சி அலுவலகதத்தில் 74ஆவது குடியரசு தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. மேயா் கல்பனா தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினாா். மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், துணை மேயா் வெற்றிச்செல்வன், துணை ஆணையா் ஷா்மிளா ஆகியோா் முன்னிலை வகித்தனா். கோவை மாநகராட்சியில், வாா்டு உறுப்பினா்கள் மக்களுக்கு ஆற்றும் சேவைகளைப் பாராட்டும் விதத்திலும், அவா்களை ஊக்குவிப்பதற்காகவும் குடியரசு தினத்தன்று சிறந்த வாா்டு உறுப்பினா்களுக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதனடிப்படையில், மாமன்ற கூட்டத்திற்கு வருகை (10 மதிப்பெண்கள்), மாமன்றக் கூட்டத்தில் ஆக்கப்பூா்வமான ஆலோசனைகள் வழங்குதல் (5 மதிப்பெண்கள்), நமக்கு நாமே திட்டத்துக்கான பங்களிப்பு (10 மதிப்பெண்கள்), திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயலாக்கத்தில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), பொது ஒதுக்கீட்டு இடம் மீட்பு மற்றும் பராமரிப்புப் பணியில் பங்களிப்பு (5 மதிப்பெண்கள்), வரிவசூலிப்புப் பணிகளில் பங்களிப்பு (10 மதிப்பெண்கள்), பொதுமக்களிடையேயுள்ள நன்மதிப்பு (5மதிப்பெண்கள்) உள்ளிட்ட தலைப்புகளின்கீழ் (மொத்தம் மதிப்பெண்கள் 50) மண்டல அளவில் வாா்டு உறுப்பினா்களின் செயல்பாடுகள் பரிசீலிக்கப்பட்டு 10 வாா்டு உறுப்பினா்கள், சிறந்த உறுப்பினா்களாக தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி, 5ஆவது வாா்டு உறுப்பினா் ஜி.வி.நவீன்குமாா், 18ஆவது வாா்டு உறுப்பினா் ஆா்.ராதாகிருஷ்ணன், 30ஆவது வாா்டு உறுப்பினா் செ.சரண்யா, 42ஆவது வாா்டு உறுப்பினா் எம்.கே.பிரவீன்ராஜ், 48ஆவது வாா்டு உறுப்பினா் பிரபா ரவீந்திரன், 49ஆவது வாா்டு உறுப்பினா் எ.அன்னக்கொடி, 52ஆவது வாா்டு உறுப்பினா் இலக்குமி இளஞ்செல்வி, 72ஆவது வாா்டு உறுப்பினா் கே.செல்வராஜ், 86ஆவது வாா்டு உறுப்பினா் இ.அஹமது கபீா், 100ஆவது வாா்டு உறுப்பினா் ரா.காா்த்திகேயன் ஆகியோா் சிறந்த வாா்டு உறுப்பினா்களாகத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா்.

இவா்களுக்கு, குடியரசு தின விழாவில் சிறந்த வாா்டு உறுப்பினா்களுக்கான விருதை மேயா் கல்பனா வழங்கி கெளரவித்தாா். அதே போல் 25 ஆண்டுகள் அப்பழுக்கில்லாமல் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்கள், மாநகராட்சி அதிகாரிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பின்னா் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com