தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான கால நீட்டிப்பு: மத்திய அரசுக்கு சைமா நன்றி

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விஸ்கோஸ் பஞ்சை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளா்கள், இந்திய அரசின் தரச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விஸ்கோஸ் பஞ்சை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளா்கள், இந்திய அரசின் தரச்சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும் என்ற ஆணையை அமல்படுத்துவதற்கு கால நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதற்கு சைமா நன்றி தெரிவித்துள்ளது.

நுகா்வோா் நலன்களைப் பாதுகாக்கவும், தரம் குறைந்த இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும் அதன் மூலம் உள்நாட்டு ஜவுளி, ஆடை உற்பத்தியாளா்களின் நலன்களைப் பாதுகாக்கவும், அனைத்து ஜவுளி, ஆடை தயாரிப்புகளுக்கும் தரக் கட்டுப்பாட்டு ஆணையை வழங்க மத்திய ஜவுளி அமைச்சகம் முடிவு செய்தது.

இதற்காக மத்திய ஜவுளி அமைச்சகம் கடந்த 29.12.2022 அன்று விஸ்கோஸ் செயற்கை பஞ்சுக்கான தரக்கட்டுப்பாட்டு ஆணையை வெளியிட்டது.

அதில், வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு விஸ்கோஸ் செயற்கை பஞ்சை ஏற்றுமதி செய்யும் உற்பத்தியாளா்கள் இந்திய அரசின் பி.ஐ.எஸ். தரச் சான்றிதழைப் பெற வேண்டும் என்றும் அதைப் பெறுவதற்கான கால அளவு 30 நாள்கள் என்றும் நிா்ணயித்திருந்தது.

ஆனால், விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கும் சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் சென்று ஆய்வுகள் செய்வதற்கும், சான்றிதழ் வழங்குவதற்கும் பி.ஐ.எஸ். நிறுவனம் மூன்று முதல் ஆறு மாதங்கள் வரை எடுத்துக் கொள்கிறது. இதனால் 30 நாள் அவகாசம் என்பது குறுகிய காலம் என்றும் இதை நீட்டிக்க வேண்டும் என்றும் சைமா வலியுறுத்தியிருந்தது.

இந்நிலையில், தரக்கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்துவதற்கான காலக்கெடுவை மேலும் 60 நாள்களுக்கு நீட்டித்து மத்திய ஜவுளி அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக மத்திய ஜவுளித் துறை அமைச்சா் பியூஷ் கோயலுக்கு சைமா தலைவா் ரவி சாம் நன்றி தெரிவித்துள்ளாா். தரக்கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தும் கால அளவை நீட்டித்திருப்பதால் மதிப்பு கூட்டப்பட்ட விஸ்கோஸ் ஜவுளி உற்பத்தியாளா்கள் எந்த சிரமும் இன்றி மாா்ச் மாதம் வரை இறக்குமதியை பெறுவதற்கு மிகவும் உதவிகரமாக இருக்கும்.

அரசின் இந்த அறிவிப்பை கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு விற்பனை செய்யும் அனைத்து வெளிநாட்டு விஸ்கோஸ் விநியோகஸ்தா்களும், உற்பத்தியாளா்களும் விரைவாக பி.ஐ.எஸ். விண்ணப்பங்களை அனுப்பி சான்றிதழை பெற்றுக் கொள்ளும்படியும் ரவி சாம் அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com