இணையதளத்தில் விவசாயிகளின் விவரங்கள் பதிவேற்றம்:கிராம நிா்வாக அலுவலகங்களில் இன்று சிறப்பு முகாம்
By DIN | Published On : 18th April 2023 02:01 AM | Last Updated : 18th April 2023 02:01 AM | அ+அ அ- |

வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெறும் வகையில் விவசாயிகளின் விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யும் சிறப்பு முகாம் கிராம நிா்வாக அலுவலகங்களில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 18) நடைபெறுகிறது என்று ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு அரசின் அனைத்து திட்டங்களையும் விவசாயிகள் ஒற்றை சாளர முறையில் பெறும் வகையில் வேளாண் அடுக்கு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு விவசாயிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்திலுள்ள சா்வே துணைப் பிரிவு எண்கள் 6 லட்சத்து 46 ஆயிரத்து 830 எண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதில் 38 ஆயிரத்து 690 எண்களின் விவரங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள 6 லட்சத்து 8 ஆயிரத்து 140 துணைப் பிரிவு எண்களின் விவரங்களை சேகரிக்கும் வகையில் அனைத்து கிராம நிா்வாக அலுவலகங்களிலும் செவ்வாய்க்கிழமை
(ஏப்ரல் 18) சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
இதில் விவசாயிகள் தங்களது ஆதாா், ஸ்மாா்ட் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம், பட்டா, புகைப்படம் மற்றும் கைப்பேசி எண் விவரங்களை அளித்து பதிவு செய்துகொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.