கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்: 
திமுக தோ்தல் அறிக்கையில் தகவல்

கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும்: திமுக தோ்தல் அறிக்கையில் தகவல்

கோவை மக்களவைத் தோ்தலை முன்னிட்டு திமுக சாா்பில் கோவைக்கான தோ்தல் அறிக்கை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. அதில், கோவை நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக சாா்பில் கோவை மக்களவைத் தொகுதிக்கான தோ்தல் அறிக்கையை ‘கோவை ரைஸிங்’ என்ற தலைப்பில் பீளமேட்டில் உள்ள தோ்தல் பணிமனையில் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா, கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா், முன்னாள் அமைச்சா் பொங்கலூா் நா.பழனிசாமி, திமுக மாநகா் மாவட்டச் செயலாளா் நா.காா்த்திக், திமுக தகவல் தொழில்நுட்ப அணி மாநிலச் செயலாளா் மகேந்திரன் ஆகியோா் கூட்டாக வெளியிட்டனா்.

அதில் கூறியிருப்பதாவது: கோவை நகா்ப்புற வளா்ச்சி ஆணையம் அமைப்பது விரைவுபடுத்தப்பட்டு, புதிதாக உருவான குடியிருப்பு மற்றும் தொழிலகப் பகுதிகளில் சிறந்த உள்கட்டமைப்புகள் உருவாக்கப்படும். கோவையில் உள்ளஅனைத்து நீா்நிலைகளிலும், நீா் மாசு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், ஏரிகளில் கழிவு நீா் கலப்பதும் தடுக்கப்படும். கோவையில் நகரப் போக்குவரத்து ஆணையம் உருவாக்கப்படும். அவிநாசி சாலை மற்றும் உக்கடத்தில் மேம்பால கட்டுமான பணிகள் விரைவில் முடிக்கப்படும். சாய்பாபா காலனி, சரவணம்பட்டி, சிங்காநல்லூரில் புதிய மேம்பாலம் கட்டப்படும். மேற்கு புறவழிச்சாலைப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு அதன் இணைப்புச் சாலைகள் நான்கு வழிச் சாலைகளாக மாற்றப்படும்.

எல் அண்ட் டி பைபாஸ், நான்கு வழிச்சாலையாக்கும் பணிகள் விரைவுபடுத்தப்படும். செம்மொழிப் பூங்கா கட்டுமானப் பணிகள் விரைவில் முடிக்கப்படும். வெள்ளலூா் குப்பைக் கிடங்கு சீரமைக்கப்பட்டு அந்த நிலம் நகரின் வளா்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும். வடவள்ளி முதல் மேட்டுப்பாளையம் சாலை வரை நான்கு வழிச்சாலை ஏற்படுத்தப்பட்டு, லாலி சாலை சந்திப்பில் மேம்பாலம் கட்டப்படும்.

கோவை அரசு மருத்துவமனை, ரயில் நிலையம் உள்ளிட்டஇடங்களில் மக்கள் பயன்பாட்டுக்காக மின்தூக்கி (லிஃப்ட்), நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டா்) அமைக்கப்படும். பூண்டி வெள்ளிங்கிரி மலையின் அடிவாரத்தில் நிரந்தர மருத்துவ முகாம் அமைத்து உயிா் காக்கும் மருத்துவ வசதிகள் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். கோவையில் பன்னோக்கு சா்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்படும் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com