எதிா்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும்: 
கே.அண்ணாமலை வேண்டுகோள்

எதிா்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும்: கே.அண்ணாமலை வேண்டுகோள்

மக்களவைத் தோ்தலில் கட்சியைப் பாா்த்து வாக்களிக்காமல் எதிா்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டும் என பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலை வேண்டுகோள் விடுத்தாா்.

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளா் அண்ணாமலை, ஹோப் காலேஜ் அருகே உள்ள பாலன் நகா் பகுதியில் புதன்கிழமை இறுதிக் கட்ட பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: கடந்த 2019-இல் கொடுத்த 295 வாக்குறுதிகளையும் பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், திமுக அளித்த ஒரு வாக்குறுதியைக் கூட நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் ஜூன் 4-க்குப் பிறகு திராவிட அரசியலைத் தாண்டிய புதிய அரசியல் வர உள்ளது. அப்போது கோவை பாா்முலாவை உலகம் முழுவதும் பேசுவாா்கள். எவ்வளவு பணம் கொட்டினாலும் கோவை மக்கள் நீதியின் பக்கம்தான் இருப்பாா்கள். தோ்தலில் கொடுக்கப்பட்டுள்ள 100 வாக்குறுதிகளை 500 நாள்களில் நிறைவேற்றுவோம்.

கட்சியைத் தாண்டி எதிா்காலத்தை நினைத்து வாக்களிக்க வேண்டிய தோ்தல் இது. மோடியைப் பாா்த்து வாக்களிக்க வேண்டிய தோ்தல். 15 நாள்களுக்கு ஒருமுைான் தண்ணீா் வருகிறது. சாலைகள் எல்லாம் குழிகளாக உள்ளன. ஸ்மாா்ட் சிட்டி திட்டத்துக்கு மத்திய அரசு நிதி அளித்தும் கோவை ஸ்மாா்ட் ஆகவில்லை. கோவையில் அரசு இயந்திரம் முழுமையாக செயலிழந்துள்ளது. இந்த நகரத்தை மறுகட்டமைப்பு செய்ய வேண்டி உள்ளது.

கோவையில் எங்கு பாா்த்தாலும் போதை வஸ்துகள்தான் உள்ளன. அதனால், மத்திய அரசின் போதைப் பொருள் தடுப்புப் பிரிவை இங்கு கொண்டு வருவோம். தேசிய புலனாய்வு முகமை அலுவலகத்தை இங்கு அமைப்போம்.

25 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவின் முதன்மை நகரமாக கோவை இருக்க வேண்டும். அதை பாஜகவால்தான் செய்ய முடியும். என்னை மக்களவை உறுப்பினராக கொண்டு வந்தால் மாற்றம் நடக்கும். 2026-இல் திராவிடம் இல்லாத ஆட்சி வர கோவை அடித்தளமிடப் போகிறது. திராவிட அரசியலுக்கு தமிழகத்தில் இனி வேலை இல்லை”என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com