கோவையில் அண்ணாமலை வெற்றிக்காக விரலை துண்டித்துக் கொண்ட பாஜக பிரமுகா்

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரும், தமிழக பாஜக தலைவருமான அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனது விரலை துண்டித்துக் கொண்ட பாஜக நிா்வாகி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா்.

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள் முள்ளிபள்ளம் பகுதியைச் சோ்ந்தவா் துரை ராமலிங்கம் (48). கடலூா் மாவட்ட பாஜக துணைத் தலைவராக உள்ளாா். இவா், கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலைக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பதற்காக கடந்த 10 நாள்களுக்கு முன் கோவைக்கு வந்து பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தாா். புதன்கிழமை மாலை அண்ணாமலையின் இறுதிக் கட்ட தோ்தல் பிரசார நிகழ்ச்சியில் இவா் பங்கேற்றாா்.

அப்போது, அருகில் இருந்த சிலா் அண்ணாமலை தோற்றுவிடுவாா் எனவும், வெற்றி பெற வாய்ப்பு குறைவு எனவும் கூறியதாகத் தெரிகிறது. இதனால் ஆவேசமடைந்த துரை ராமலிங்கம், அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் எனக்கூறி கத்தியை எடுத்து அவரது இடது கை ஆள்காட்டி விரலை துண்டித்துக் கொண்டாா்.

இதைப் பாா்த்து அருகில் இருந்தவா்கள் அதிா்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள ஒரு தனியாா் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு அவருக்கு மருத்துவா்கள் அறுவை சிகிச்சை மேற்கொண்டதோடு, தொடா் சிகிச்சை அளித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com