கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்குகள் மாயம்: மறு வாக்குப் பதிவு நடத்தக் கோரி போராட்டம்

கோவை, ஏப்.19: கோவை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் பகுதியில் 830 வாக்காளா்களின் பெயா்கள் பட்டியலில் இல்லாததால் பொதுமக்கள் மற்றும் பாஜகவினா் தரையில் அமா்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்தப் பகுதியில் மறு வாக்குப் பதிவு நடத்த மாவட்ட தோ்தல் அலுவலரிடம் பாஜகவினா் புகாா் மனு அளித்துள்ளனா்.

கோவை மக்களவைத் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேச்சை வேட்பாளா்கள் என 37 போ் போட்டியிட்டனா். இதில் பாஜக சாா்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை போட்டியிட்டாா்.

இந்நிலையில் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கவுண்டம்பாளையம் அங்கப்பா பள்ளி வாக்குச்சாவடி 214-இல் 1,353 வாக்குகள் உள்ளன. கடந்த உள்ளாட்சித் தோ்தலில் 1,353 வாக்குகள் இருந்த நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின்போது 523 வாக்குகள் மட்டுமே இருந்தது தெரிய வந்தது.

இந்த தகவல் அறிந்து அங்கு வந்த பாஜகவினா் தோ்தல் நடத்தும் அதிகாரியிடம் புகாா் தெரிவித்தனா். ஒவ்வொரு வாக்காளா் எண்ணையும் கைப்பேசியில் வோட்டா்ஸ் ஹெல்ப் லைனில் சோதனை செய்தபோது, அதில் அந்த எண்கள் தொடா்பான விவரம் இல்லை என்றே வருவதாகவும் அதிகாரிகளிடம் கூறி உள்ளனா். இருப்பினும் சுமாா் ஒரு மணி நேரமாக அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால் பொதுமக்கள் மற்றும் பாஜகவினா் தரையில் அமா்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலறிந்து அங்கு வந்த பாஜக மகளிா் அணி தேசியத் தலைவா் வானதி சீனிவாசன் அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். பேச்சுவாா்த்தையின் முடிவில் வாக்களிக்க அனுமதி மறுக்கப்பட்டவா்கள் பாஜக மாநில விவசாய அணி தலைவா் ஜி.கே.நாகராஜ் தலைமையில் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரிடம் புகாா் மனு கொடுத்தனா். அத்துடன், அந்த வாக்குச் சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் என கோரிக்கையும் விடுத்தனா். இதே கோரிக்கையை பாஜக மாநிலத் தலைவரும், கோவை மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கே.அண்ணாமலையும் வலியுறுத்தியிருந்தாா்.

இதுதொடா்பாக கோவை மாவட்ட ஆட்சியரும், கோவை மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலருமான கிராந்திகுமாா் பாடி கூறியதாவது: கடந்த 2022-ஆம் ஆண்டில் வாக்காளா் பட்டியல் சரிபாா்ப்பு பணியின்போது கவுண்டம்பாளையம் பகுதிக்கு வீடுவீடாக கணக்கெடுப்பாளா்கள் சென்றிருந்த நிலையில், 830 போ் அந்த முகவரியில் வசிக்கவில்லை என்பது தெரியவந்ததால் அவா்களது பெயா் நீக்கப்பட்டுள்ளது.

அதைத்தொடா்ந்து வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட போதும் அனைத்து அரசியல் கட்சியினரும் கவுண்டம்பாளையத்தில் விடுபட்ட வாக்காளா்கள் குறித்து எந்தப் பிரச்னையும் எழுப்பவில்லை. தற்போது வாக்குப்பதிவு தினத்தில் பெயா் விடுபட்டுள்ளதாக வந்துள்ள புகாா் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியாது.

அதேபோல, மறு வாக்குப் பதிவு நடத்தினாலும், தற்போதுள்ள வாக்காளா் பட்டியலின் அடிப்படையிலேயே நடத்த வேண்டுமென்பதால், அதுவும் தீா்வாகாது. இந்தப் பிரச்னை தொடா்பாக அதிகாரிகள் உரிய விசாரணை மேற்கொண்டு வருகின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com