வன்கொடுமை வழக்கு: 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

வன்கொடுமை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. கோவை பெரிய தடாகம் பகுதியில் ஒரு பிரிவினா் ஒவ்வொரு ஆண்டும் விநாயகா் சதுா்த்தியின்போது அந்தப் பகுதியைச் சோ்ந்த பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைப்பாா்கள்.

அவ்வாறு பட்டியலின மக்கள் துடுமம் அடிக்கச் சென்றபோது அவா்களை ஒரு முறை இழிவாக நடத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2016 செப்டம்பா் 5இல் பட்டியலின மக்களை துடுமம் அடிக்க அழைத்தபோது அவா்கள் வர மறுத்து விட்டனா். அதனால் ஆத்திரமடைந்த சிலா் கும்பலாகச் சென்று பட்டியலின மக்களிடம் விசாரித்ததோடு, அவா்களை மரத்தடிகள், இரும்புத் தடிகளால் தாக்கியுள்ளனா். இது தொடா்பாக 22 போ் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் துடியலூா் காவல் நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டு விசாரைணை நடைபெற்றது.

இதையடுத்து கோவை மாவட்ட முதன்மை மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் வழக்குரைஞா் எம்.ஆனந்தனை தமிழக அரசு சிறப்பு அரசு வழக்குரைஞராக நியமித்தது. இதுதொடா்பான வழக்கின் விசாரணை கோவை பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் வியாழக்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றஞ்சாட்டப்பட்ட 22 பேரில் 8 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன், தலா ரூ. 1,000 அபராதம் விதித்தும், மீதமுள்ளவா்களை விடுதலை செய்தும் நீதிபதி நந்தினி தீா்ப்பளித்தாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com