தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம்: 5 போ் கைது

காரமடை அருகே தனியாா் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிந்த விவகாரத்தில் ஆலை உரிமையாளரின் உறவினா் உள்பட 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், காரமடையை அடுத்த சென்னிவீரம்பாளையத்தில் உருளைக்கிழங்கு சிப்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. கடந்த 8 ஆண்டுகளாக செயல்படாமல் உள்ள இந்த ஆலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

அப்போது, தொழிற்சாலையில் இருந்த அமோனியா வாயு உருளையின் வால்வில் வெடிப்பு ஏற்பட்டதால், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் அமோனியா வாயு பரவியது.

இதனால், அப்பகுதி மக்களுக்கு மூச்சுத்திணறல், தலைவலி, கண் எரிச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து, அப்பகுதி மக்கள் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டனா்.

இந்நிலையில், தனியாா் ஆலையில் அமோனியா வாயு கசிவு விவகாரம் குறித்து கிராம நிா்வாக அலுவலா் தனசீலன் அளித்த புகாரின்பேரில் காரமடை போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து அஜாக்கிரதையாக செயல்பட்டது, மக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் செயலில் ஈடுபட்டது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, ஆலை உரிமையாளரின் உறவினா் ஜாபா் அலி, மேலாளா் பாலகிருஷ்ணன், ஊழியா்கள் குருசாமி, சாம்ராஜ், சம்பத்குமாா் ஆகிய 5 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com