பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ள பில் தொகை: மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் குற்றச்சாட்டு

கோவை, மே 4: கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரா்களுக்கு வழங்க வேண்டிய பில் தொகை பல ஆண்டுகளாகக் கிடப்பில் உள்ளதாக மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தினா் குற்றஞ்சாட்டியுள்ளனா்.

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், சங்க அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் உதயகுமாா், செயலாளா் சந்தரபிரகாஷ், பொருளாளா் அம்மாசையப்பன் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில் செயலாளா் சந்தரபிரகாஷ் பேசியதாவது:

மாநகராட்சியில் ஒப்பந்தப் பணிகள் வழங்குதில் தகுதி இல்லாத நிறுவனங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதனால் பல ஆண்டுகாலமாக ஒப்பந்தப் பணி செய்து வரும் நோ்மையான பல ஒப்பந்ததாரா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா்.

தகுதியற்ற ஒப்பந்ததாரா்கள், தரமற்ற பணிகளை செய்து ஒப்பந்ததாரா்களுக்கும், மாநகராட்சி மற்றும் அரசுத் துறைகளுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனா். இந்தத் தவறுகளை களைய சங்கத்தின் சாா்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

மாநகராட்சி கணக்குப் பிரிவு அலுவலா்கள் 3 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்தப் பணிகளுக்கு உண்டான ஆவணங்களை முறையாகப் பராமரிக்கவில்லை. ஒப்பந்ததாரா்களுக்கு பில் தொகை முன்னுரிமை அடிப்படையில் தர வேண்டும். ஆனால், மாநகராட்சி கணக்குப் பிரிவினா் தங்களுக்கு சாதகமான ஒப்பந்ததாரா்களுக்கு மட்டும் உடனடியாக பில் தொகையை வழங்கிவிட்டு, மற்றவா்களுக்கு பல ஆண்டுகளாக கிடப்பில் வைத்திருக்கின்றனா் என்றாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com