‘யானைகள் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்’

தமிழகத்தில் காணப்படும் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பின் தலைவா் கே.காளிதாசன் தெரிவித்துள்ளாா்.

கோவை: தமிழகத்தில் காணப்படும் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பகளை அகற்ற வேண்டும் என்று ஓசை அமைப்பின் தலைவா் கே.காளிதாசன் தெரிவித்துள்ளாா்.

தமிழகத்தில் நீலகிரி, கோவை, ஆனைமலை, ஸ்ரீவில்லிபுத்தூா், அகஸ்தியா் மலை ஆகிய 5 யானைகள் காப்பகம் உள்ளிட்ட 20 வனக் கோட்டங்களில் கடந்த 2023-ஆம் ஆண்டு வனத் துறையினரின் கணக்கெடுப்பின்படி 20 யானைகள் வழித்தடங்களும், 2,961யானைகளும் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மனித ஆக்கிரமிப்புகள், தனியாா் தங்கும் விடுதிகள், விவசாய தலையீடுகள் காரணமாக யானைகள் வழித்தடங்களில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளதோடு, கடந்த 10 ஆண்டுகளில் மனித-யானை மோதல் அதிகரித்து உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன.

இதைத் தவிா்க்க யானைகளின் வாழ்விடங்களைப் பாதுகாத்தல், நெருக்கடியான யானைகள் வழித்தடத்தை அடையாளம் காணுதல் ஆகியவற்றை உள்ளடக்கி, தமிழக வனத் துறை கூடுதல் முதன்மை தலைமை வனப் பாதுகாவலா் வி.நாகநாதன் தலைமையில் வனத் துறை, அறிவியல் நிபுணா்கள் அடங்கிய குழு விரிவான ஆய்வு மேற்கொண்டு, யானைகள் வழித்தட திட்ட வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

இக்குழு, தமிழகம் முழுவதும் 42 யானைகள் வழித்தடங்களை அடையாளம் கண்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆா்வலா்கள், இயற்கை ஆா்வலா்கள் தங்களது கருத்துகளை மின்னஞ்சல் மூலமாக மே 5-ஆம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கான காலக்கெடு ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகள், பொது நல அமைப்புகள் சாா்பில் கருத்துகள் அனுப்பப்பட்டுள்ளன.

இது குறித்து ஓசை அமைப்பின் தலைவரும், தமிழக அரசு கானுயிா் சங்கத்தின் உறுப்பினருமான கே.காளிதாசன் கூறியதாவது:

நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை சீகூா் யானைகள் வழித்தடம் குறித்து ஏற்கெனவே உயா்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமமும் தெளிவுபடுத்தி தீா்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கேளிக்கை விடுதிகளை அரசு கையகப்படுத்த வேண்டும். சில இடங்களில் நிலங்களை விலைக்கு வாங்க வேண்டியதுடன், அதற்கான ஒப்பந்தமும் செய்துகொள்ள வேண்டும். தமிழக அரசு யானைகள் வழித்தட திட்டக்குழு தயாரித்துள்ள பரிந்துரைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

ஓவேலி- முதுமலை யானைகள் வழித்தடத்தில் பிரிவு 17, 43 இல் ஏராளமான நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளன. எனவே, மக்கள் வசிப்பிடத்தையும், யானைகள் வழித்தடத்தையும் வரையறுக்க வேண்டும். யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

கோவை வனக் கோட்டத்தில் ஏற்கெனவே 2 யானைகள் வழித்தடங்கள் உள்ளன. தற்போது தாணிகண்டி - அனுவாவி - மருதமலை - மாங்கரை யானைகள் வழித்தடம், கல்குத்தி - வாளையாறு யானைகள் வழித்தடம் என இரண்டு யானைகள் வழித்தடங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

யானைகள் மலை அடிவாரப் பகுதியில்தான் வலசை செல்லும். அதன் வழித்தடங்கள் துண்டாடப்பட்டால் மனித-யானை மோதல்கள் தொடரும். எனவே, மிக அவசியமாக குறுகியப் பாதைகளை அரசு காப்பாற்ற வேண்டும் என்றாா்.

பெட்டி செய்தி

யானைகள் வழித்தட பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொள்ளக்கூடாது

வெள்ளிங்கிரி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத் தலைவா் குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழகத்தில் புதிதாக கண்டறியப்பட்டுள்ள 42 யானைகள் வழித்தடங்கள் குறித்து வனத் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டிருந்த வரைவு அறிக்கையில், கோவையில் மட்டும் 4 யானைகள் வழித்தடங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில், விவசாய நிலங்கள், வீடுகள், கோயில்கள் இருக்கும் பகுதியும் யானைகள் வழித்தடமாக குறிப்பிடப்பட்டுள்ளது. யானைகள் வழித்தடங்கள் குறித்த ஆய்வு மேற்கொண்டபோது விவசாயிகளிடம் கலந்தாலோசிக்கவில்லை, கருத்துக்கேட்வும் இல்லை. ஒரு தலைபட்சமாக இந்த வரைவு அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில், மருதமலை, அனுவாவி, பண்ணாரி, பொன்னூத்து அம்மன் கோயில் ஆகிய கோயில்கள் அமைந்துள்ள பகுதிகளும் யானைகள் வழித்தடமாகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ஹிந்து மக்களின் வழிபாட்டு உரிமையை பறிக்கும் முயற்சியாகக் கருதுகிறோம்.

எனவே, எவ்வித முறையான களஆய்வும், உள்ளூா் மக்களின் கலந்தாலோசனையும் இல்லாமல் தன்னிச்சையாக தயாரிக்கப்பட்டுள்ள ‘வெள்ளிங்கிரி ஆண்டவா் கோயில் - மருதமலை’ யானைகள் வழித்தடப் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com