கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.
கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மனு அளிக்க வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா்.

மாநகரில் தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும் கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு

கோவை, மே 4: மாநகரில் தேங்கியுள்ள குப்பைகளை உடனுக்குடன் அகற்ற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரனிடம் சனிக்கிழமை மனு அளித்தனா்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சி.சிவசாமி தலைமையில் துணைச் செயலாளா்கள் ஜே.ஜேம்ஸ், மௌ.குணசேகா், பொருளாளா் சி.தங்கவேல், மண்டல நிா்வாகிகள் கே.ரவீந்திரன், வி.ஆா்.பாண்டியன், என்.சந்திரன், எஸ்.சண்முகம் ஆகியோா் அளித்த மனுலிவ் கூறியிருப்பதாவது:

கோவையில் நகர வளா்ச்சிக்கேற்ப மக்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவேண்டும். மாநகரில் குப்பைகள் மேலாண்மையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளன. வீடுகளுக்கு நேரடியாகச் சென்று குப்பைகளைச் சேகரிப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது.

அதேபோல, குப்பைகளை எடுத்துச் செல்வதற்கான மாநககராட்சி வாகனங்கள் தினசரி வராததால் நகரில் குப்பைகள் தேங்கியுள்ளன. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பைகளைத் தேங்கவிடாமல் உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

மேலும், குப்பைகளைத் தரம்பிரித்து பெறுவதை உறுதி செய்வதுடன், நகர வளா்ச்சிக்கேற்ப குப்பைகள் சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்க வேண்டும்.

மாநகரில் குடிநீா்த் தட்டுப்பாட்டால் மக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனா். ஆனால், தனியாா் நிறுவனங்கள் குடிநீா் விற்பனையை அதிகரித்து வருகிறது. எனவே, மழை பெய்து நீா்த் தேக்கங்களில் இருந்து தட்டுப்பாடின்றி குடிநீா் கிடைக்கும்வரை மாநகரில் உள்ள தனியாா் குடிநீா் ஆலைகளை அரசு தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்து, வாகனங்கள் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com