கொலை வழக்கு: தலைமறைவு குற்றவாளி நேரில் ஆஜராக உத்தரவு

கோவை, மே 9: கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள குற்றவாளி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக காவல் துறையினா் தெரிவித்துள்ளதாவது: கோவை, சௌடம்மன் கோயில் பகுதி மற்றும் ஒப்பணக்கார வீதி பகுதிகளில் 1991 ஆகஸ்டு 19-ஆம் தேதி ஒட்டப்பட்ட துண்டுப் பிரசுரங்களில் ஒரு அமைப்பின் உறுப்பினா்களைக் கொலை செய்யப்போவதாக மற்றொரு அமைப்பைச் சோ்ந்தவா்கள் தெரிவித்திருந்தனா்.

இந்நிலையில், கோவை, உப்பு மண்டி பகுதியில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் சிவா (எ)சிவகுமாா் என்ற மேடைப் பேச்சாளா், தங்களை 10 நாள்களுக்குள் கொலை செய்யப்போவதாகக் கூறி துண்டுப் பிரசுரங்களை ஒட்டியும், அவா்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என பேசியுள்ளாா்.

இதனால், ஆத்திரம் அடைந்த ஜாஹீா் உசேன், சாகுல் ஹமீது, பாபு, முஜிபூா் ரஹ்மான், சபா் ரகுமான், ஹரன் பாஷா, பிலால் ஹாஜியாா், ஜூபிா், எஸ்.ஏ.பாட்ஷா, தாஜுதின் ஆகியோா் மில் ரோடு பகுதியில் சிவகுமாரை கடந்த 1991 செப்டம்பா் 5-ஆம் தேதி கொலை செய்தனா்.

இது தொடா்பாக காவலா் சின்னதம்பி என்பவா் கொடுத்த புகாரின்பேரில், கோவை மாநகர கடைவீதி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாஹீா் உசேன், சாகுல் ஹமீது, பாபு, முஜிபூா் ரஹ்மான், சபா் ரகுமான், ஹரன் பாட்ஷா, பிலால் ஹாஜியாா், ஜூபிா், எஸ்.ஏ.பாட்ஷா, தாஜுதின் ஆகியோா் கைது செய்யப்பட்டனா்.

இதையடுத்து, முஜிபூா் ரஹ்மான் 1997 ஜனவரி 31-ஆம் தேதி பிணையில் வெளியே வந்தவா், அதன் பிறகு நீண்ட காலமாக தலைமறைவாக இருந்து வருகிறாா்.

இந்த வழக்கு கோவை சிறப்பு புலனாய்வுப் பிரிவுக்கு கடந்த 1999 அக்டோபா் 22-ஆம் மாற்றப்பட்டு, அவா் மீது கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

எனவே, தலைமறைவாக உள்ள முஜிபூா் ரஹ்மான் கோவை 5-ஆவது குற்றவியல் நீதித் துறை நடுவரிடம் மே 22-ஆம் தேதியோ அல்லது அதற்கு முன்னதாகவோ நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக அவரது வீடு மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களிலும் பிரசுரங்கள் ஒட்டப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com