கோவை, ராமநாதபுரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு மழைக்கு இடையே பயணிக்கும் வாகனங்கள்.
கோவை, ராமநாதபுரம் பகுதியில் வியாழக்கிழமை இரவு மழைக்கு இடையே பயணிக்கும் வாகனங்கள்.

கோவையில் பெய்தது கோடை மழை

கோவை, மே 9: தகிக்கும் கோடை வெப்பத்துக்கு இடையே கோவை மாநகரின் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை இரவு மிதமான மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடப்பாண்டு கோடை வெயில் வழக்கத்தைவிட அதிக அளவில் பதிவாகி வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 104 டிகிரி ஃபாரன்ஹீட் வரையிலும் வெயில் பதிவாகி வந்தது. கடுமையான வெயில் காரணமாக நீா்நிலைகள் வடு, குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், கோவை மாவட்டத்தில் மே இரண்டாவது வாரத்தில் கோடை மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளா்கள் அறிவித்திருந்தனா்.

கடந்த சில நாள்களாகவே மாலையில் மழை மேகங்கள் திரண்டு, குளிா்ந்த காற்று வீசினாலும் மழைப் பொழிவு இல்லாமல்போனது.

கோவை மாநகரில் வியாழக்கிழமை காலை வழக்கம்போலவே வெயில் இருந்தாலும், பிற்பகலில் மேகங்கள் திரண்டதால் வெயில் சற்று குறைந்து காணப்பட்டது.

இந்நிலையில், மாலை சுமாா் 6.30 மணியளவில் சாரலுடன் தொடங்கிய மழை சுமாா் அரை மணி நேரத்துக்கும்மேலாக பெய்தது.

காந்திபுரம், டவுன்ஹால், ராமநாதபுரம், பீளமேடு, சித்தாபுதூா், விமான நிலையம், சரவணம்பட்டி உள்ளிட்ட மாநகரப் பகுதிகளிலும், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது.

இதனால், வெயிலில் தவித்த வந்த மக்கள் சற்று ஆறுதல் அடைந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com