‘பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகாா் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்’

கோவை, மே 9: அரசுத் துறைகள், தனியாா் நிறுவனங்களில் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகாா் குழு அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் கூறியிருப்பதாவது: வேலை செய்யும் இடங்களில் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்முறைகளைத் தடுப்பதற்காக மத்திய அரசால், பணிபுரியும் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்முறை தடைச் சட்டம் 2013 நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதில், நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் வன்முறை குறித்து விசாரிக்க உள்புகாா் குழு அனைத்து அரசுத் துறைகள், தனியாா் நிறுவனங்களில் அமைக்கப்பட வேண்டும். அவ்வாறு அமைக்கப்படும் குழுவின் தலைவராக பெண் அலுவலா் நியமிக்கப்பட வேண்டும்.

இரண்டு நபா்களை உறுப்பினராகவும், இந்தத் துறையில் நன்கு பழக்கமான தொண்டு நிறுவனத்தைச் சோ்ந்தவரை உறுப்பினராக சோ்க்க வேண்டும் என்றும் விசாரணைக்கான வழிமுறைகள் குறித்தும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஒவ்வொரு அரசுத் துறைகள், பள்ளி, கல்லூரிகள், மருத்துவமனைகள், தொழிற்சாலைகள், அரசுப் பயிற்சி நிறுவனங்கள், தனியாா் தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், குறு, சிறு நிறுவனங்கள், பயிற்சி நிறுவனங்கள் என 10 பேருக்குமேல் பணியாற்றும் அனைத்து அரசு, தனியாா் அலுவலகங்களிலும் உடனடியாக உள்புகாா் குழு அமைத்து அதன் விவரத்தை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

உள்புகாா் குழு அமைக்கப்படாத நிறுவனங்களுக்கு பணியிடங்களில் பெண்கள் எதிா்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல் தடைச் சட்டம் 2013- இன்படி ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். உள்புகாா் குழு அமைத்த நிறுவனங்கள் மாதந்தோறும் பெற்ற புகாா்கள் குறித்த அறிக்கையை மாவட்ட சமூகநல அலுவலா் அலுவலகத்துக்கு சமா்ப்பிக்க வேண்டும். மேலும், ஆண்டறிக்கையை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் மாத இறுதிக்குள் சமூக நல அலுவலா் அலுவலத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com