புதை சாக்கடை திட்டப் பணிகள் தாமதம்: பொதுமக்கள் சாலை மறியல்

புதை சாக்கடை திட்டப் பணிகளில் நீடித்து வரும் தாமதத்தைக் கண்டித்து, நேதாஜி மார்க்கெட் சாலை பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.


புதை சாக்கடை திட்டப் பணிகளில் நீடித்து வரும் தாமதத்தைக் கண்டித்து, நேதாஜி மார்க்கெட் சாலை பகுதி மக்கள் சாலை மறியலில் சனிக்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோடு மாநகராட்சி 2 ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட 28 ஆவது வார்டில் நேதாஜி மார்க்கெட் சாலை, கிருஷ்ணா திரையரங்க சாலை, காவிரி சாலை ஆகிய இடங்களில் கடந்த ஓராண்டுக்கு முன் புதை சாக்கடைத் திட்டம் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. முதல்கட்டமாக கட்டப்பட்ட கழிவு நீர்த் தொட்டிகளுக்கு குழாய் இணைப்பு கொடுக்கப்படவில்லையாம். சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன. இதற்கு கடந்த ஓராண்டுக்கு முன் ஒப்பந்தம் எடுத்தவர் பணியை பாதியில் விட்டுச் சென்றதுதான் முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஈரோட்டில் வெள்ளிக்கிழமை இரவில் மழை பெய்தது. இதன் காரணமாக கிருஷ்ணா திரையரங்கம், மார்க்கெட் சாலை, காவிரி சாலை ஆகியவை சேறாகி குளம் போன்று காட்சியளித்தது. மார்க்கெட்டுக்கு சனிக்கிழமை காய்கறி ஏற்றி வந்த வாகனங்கள் இந்தச் சாலை வழியாக செல்ல முடியாததால் ஓட்டுநர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர். மேலும், வளையகார வீதி, அய்யனாரப்பன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காவிரி சாலைக்கு வந்த பொதுமக்களும் பாதிக்கப்பட்டனர்.
இதனால், அதிருப்தியடைந்த அப்பகுதியைச் சேர்ந்த வியாபாரிகள், பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த, மாநகராட்சி உதவி ஆணையர் அசோக்குமார், கருங்கல்பாளையம் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சு நடத்தி, சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.
இதுகுறித்து, மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், இப்பகுதியில் ரூ. 12 லட்சம் மதிப்பில் புதை சாக்கடைத் திட்டத்தை மேற்கொள்ள ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. முன்னதாக, தற்காலிக தீர்வு காணும் வகையில் தார் சாலை அமைப்பதற்கு பயன்படுத்தப்படும் சிறிய ஜல்லிக் கற்கள் மூலம் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com