என்ன செய்ய வேண்டும் நமது எம்.பி.?

ஈரோடு ஜவுளித் தொழிலில் உள்ள பிரச்னையான சாய, சலவைக் கழிவுகளை சுத்திகரித்து கடலில் கொண்டு கலக்கும்

ஈரோடு ஜவுளித் தொழிலில் உள்ள பிரச்னையான சாய, சலவைக் கழிவுகளை சுத்திகரித்து கடலில் கொண்டு கலக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ள மத்திய, மாநில அரசுகள் இந்தத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உடனே  நிறைவேற்றி ஜவுளித் தொழிலை பாதுகாத்திட வேண்டும். 
ஈரோட்டில் ஒருங்கிணைந்த ஜவுளி வணிக வளாகம் அமைத்திட வேண்டும். உணவு சார்ந்த, ஜவுளி சார்ந்த பொருள்கள் அனைத்துக்கும் ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
 ஈரோட்டை தலைமை இடமாகக் கொண்டு ஜவுளித் தொழில்நுட்ப பயிற்சி கல்லூரி அமைத்திட வேண்டும். பருத்தி நூல் விலைகளில் உள்ள ஏற்ற, இறக்கத்தை சரி செய்திட மத்திய அரசு அறிவித்துள்ள பருத்தி மற்றும் நூல் வங்கிகள் ஈரோட்டில் அமைத்திட வேண்டும். 
 தாராபுரம் பகுதியை உணவு ஏற்றுமதி மண்டலமாக அறிவித்து அந்தப் பகுதியில் முருங்கை பவுடர் தொழிற்சாலை அமைக்க வேண்டும்.
என்.சிவநேசன் மாநில இணை பொதுச்செயலர் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு

ஈரோடு மாவட்டத்தில் 50,000 விசைத்தறிகள் உள்ளன. இதனை நம்பி 1 லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு நெசவுத்தொழில் தான் வாழ்வாதாரம். விசைத்தறியில் உற்பத்தி செய்யப்படும் ரகங்களுக்கு ரக ஒதுக்கீட்டினை அறிவிக்க வேண்டும். இதனை அமல்படுத்த மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். 
விசைத்தறி உற்பத்தி ரகங்களுக்கு மூலப்பொருள்கள் வாங்க 12 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது.  இதில் 5 சதவீதம் விற்பனையின்போது திரும்ப கிடைத்து விடுகிறது. மீதி 7 சதவீதத்தை திரும்பபெற வழிவகை இருந்தும், அதற்கான நடைமுறைகள் எளிதாக இல்லை. இதனை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கையெடுக்க வேண்டும். நூல் விலையில் நிலையற்ற தன்மை நிலவுவதால் பல சமயங்களில் விசைத்தறியாளர்கள் இழப்பை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் நூல் விலை மாற்றத்தை மாதம் ஒருமுறை என்ற அடிப்படையில் நிர்ணயிக்க வேண்டும்.
பா.கந்தவேல். 
செய்திதொடர்பாளர் ஈரோடு விசைத்தறி உரிமையாளர்கள் சங்கம்

ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம், கோவை, திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 3 லட்சம் விசைத்தறிகள் உள்ளன. இந்தத் தொழிலை நம்பி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். சாயக்கழிவு பிரச்னை காரணமாக துணிகள் குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களுக்கு எடுத்துசெல்லப்பட்டு சாயமேற்றப்படுகின்றன. இதனால் துணிகளின் விலை அதிகரிக்கிறது. இதனைக் கவனத்தில் கொண்டு ஈரோடு தொகுதிக்குள்பட்ட பள்ளிபாளையம் பகுதியில் பொதுசுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என 2011 தேர்தலின்போது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதன்பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 
நீர் நிலைகள் மாசுபடாமல் தடுக்க பள்ளிபாளையம் பகுதியில் சாயக்கழிவுகளை சுத்தப்படுத்தும் ஒருங்கிணைந்த பொதுசுத்திகரிப்பு நிலையம் மத்திய அரசு மூலம் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கே.செல்வராஜ்  தலைவர் ஈரோடு கனி மார்க்கெட் வாரச்சந்தை அனைத்து ஜவுளி வியாபாரிகள் சங்கம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com