பவானிசாகர் அருகே வாழை மரங்களை சேதப்படுத்திய ஒற்றை காட்டு யானை
By DIN | Published On : 21st April 2019 04:12 AM | Last Updated : 21st April 2019 04:12 AM | அ+அ அ- |

பவானிசாகர் அருகே தோட்டத்துக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானை 50 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின.
பவானிசாகர் அருகே சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள விளாமுண்டி வனப் பகுதியில் யானை, மான் உள்ளிட்ட வன விலங்குகள் வசிக்கின்றன. தற்போது, வனப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவுவதால் யானைகள் உணவு மற்றும் குடிநீர் தேடி வனத்தை விட்டு இரவு நேரங்களில் வெளியேறி அருகாமையில் உள்ள கிராமங்களுக்குள் நுழைகின்றன.
அப்போது, விவசாயிகள் தோட்டத்துக்குள் நுழையும் யானைகள் அங்கு பயிரிட்டுள்ள பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில், பவானிசாகர் போலீஸ் குடியிருப்புக்கு எதிர்புறம் உள்ள விவசாயி அப்புசாமி என்பவரது விவசாயத் தோட்டத்துக்குள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்த ஒற்றை யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த ஜி 9 ரக வாழை மரங்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்தின. இதைக் கண்ட விவசாயி அப்புசாமி உடனடியாக போலீஸார் மற்றும் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினர் பட்டாசுகளை வெடித்து யானையை விரட்ட முயற்சித்தனர். ஆனால், அந்த ஒற்றை யானை வாழைத் தோட்டத்தை விட்டு வெளியேறாமல் அங்கேயே நின்றது. இதில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த 50 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஏற்கெனவே இதே தோட்டத்துக்குள் நுழைந்த யானைகள் 150 க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தியது குறிப்பிடத்தக்கது. யானைகள் ஊருக்குள் வருவதால் இரவு முழுவதும் கண் விழித்து யானைகளை விரட்டினாலும் வாழை மரங்கள் சேதமடைவதை தடுக்க முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்தனர். சேதமடைந்த பயிருக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். யானைகள் வனப் பகுதியை விட்டு வெளியே வராமல் தடுக்க வனத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.