இளைஞர்கள் தேடும் அரசியல், பொருளாதார புத்தகங்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞர்கள் பலர் அரசியல், பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களை ஏராளமாக

ஈரோடு புத்தகத் திருவிழாவில் இளைஞர்கள் பலர் அரசியல், பொருளாதாரம் சார்ந்த புத்தகங்களை ஏராளமாக வாங்கிச் செல்கின்றனர் என்று பதிப்பகத்தார் தெரிவித்தனர். 
 புத்தகத் திருவிழாவில் இந்த ஆண்டு இளைஞர்களது வருகை கூடியுள்ளதைக் கவனிக்க முடிகிறது. ஆங்காங்கே இருக்கும் ஆங்கில நூல் அரங்குகளில் அரசியல் தொடர்பான நூல்களை வாங்கிப் படிப்பதில் பெரிதும் ஆர்வம் காட்டும் இந்த இளைஞர்கள், வாசிப்பினை ஒரு கூட்டுச் செயல்பாடாக நிகழ்த்துகின்றனர்.
  நண்பர்களுக்குத் தாங்கள் வாங்கிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவதன் மூலமும், பிற நண்பர்கள் பரிந்துரைக்கும் நூல்களை வாங்கிப் படிப்பதன் மூலமும் ஓர் அலாதியான அனுபவமாக வாசித்தலை உருமாற்றுகின்றனர்.
 சமூகம் சார்ந்த நேரடியான அரசியல் கருத்துகளைப் பேசும் புத்தகப் பதிப்பகங்களின் அரங்குகளில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு அதிகம்பேர் குழுமித் தங்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்கிச் சென்றனர். இதுமாதிரியான அரசியல் பேசும் புத்தக அரங்குகளுக்குக் குறிப்பாக இளைஞர்களின் வருகை அதிகரித்துள்ளது கூடுதல் சிறப்பம்சமாகப் பார்க்கப்படுகிறது என்கின்றனர் பதிப்பகத்தார். 
  இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது: 
புத்தகத் திருவிழாவுக்கு இளைஞர்கள் நிறைய வருகிறார்கள் என்பது மட்டுமல்ல, வருகைதரும் இளைஞர்களின் புத்தக தேடல் சமூகப் பார்வை சார்ந்து இருக்கிறதென்பதுதான் மகிழ்ச்சியளிக்கக் கூடிய விஷயம். வெறும் புத்தகத்தை வாங்குவது என்றில்லாமல் புதிய கருத்துகளை சிந்திக்க முற்படுவது நம்பிக்கை அளிப்பதாக உள்ளது.
 தமிழக இளைஞர்கள் வலைதளம், செல்லிடப்பேசி இதுபோன்ற விஷயங்களில்தான் கவனம் செலுத்துகிறார்கள் என்ற கருத்தை தகர்த்திருக்கிறார்கள் அன்றாடம் வருகைதரும் இளைஞர்கள்.  
 இளைஞர்கள் அரசியல் நூல்களைத் தேடி வாங்குகிறார்கள்.  அரசியல் சார்ந்த புத்தகங்களின் மீது முதியவர்களைக் காட்டிலும் இளைஞர்கள்தான், இந்த ஆண்டு அதிக ஆர்வமாக உள்ளனர். பொருளாதாரம் சார்ந்த மற்றும் பணமதிப்பிழப்பால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த புத்தகங்களும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளன. 
  இது மாதிரியான புத்தகங்களைத் தேடி வரும் இளைஞர்களில் பலரும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் வேலை செய்பவர்களாக உள்ளனர். அவர்களுக்கு இதுவரை சமூகம் குறித்த பெரிய அளவிலான தெளிவு இல்லை என்றாலும் அதைத் தெரிந்து கொள்வதற்கான தேடல் அவர்களிடம் உருவாகியுள்ளது. இளைஞர்கள் மனதில் அரசியல் குறித்து எழுந்துள்ள பல கேள்விகளுக்கான விடைகளை இங்குக் கிடைக்கும் புத்தகங்களின் மூலம் தேடுகின்றனர் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com