வரலாற்றின் மூலம்தான் உரிமையை அறிந்துகொள்ள முடியும்: ஐஏஎஸ் அதிகாரி ஆர்.பாலகிருஷ்ணன்

வரலாற்றின் மூலம் தான் உரிமையை அறிந்துகொள்ள முடியும் என சிந்துவெளி ஆய்வாளரும், ஒடிசா மாநில அரசு தலைமை ஆலோசகருமான ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 

வரலாற்றின் மூலம் தான் உரிமையை அறிந்துகொள்ள முடியும் என சிந்துவெளி ஆய்வாளரும், ஒடிசா மாநில அரசு தலைமை ஆலோசகருமான ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். 
மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் நடத்தப்படும் ஈரோடு புத்தகத் திருவிழாவில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற சிந்தனை அரங்க நிகழ்வில் மக்கள் சிந்தனைப் பேரவைத் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரையாற்றினார். 
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப கல்லூரி அறக்கட்டளை தலைவர் பரமேஸ்வரி லிங்கமூர்த்தி தலைமை வகித்தார். கொங்கு பொறியியல் கல்லூரி தாளாளர் ஏ.வெங்கடாசலம், தொழிலதிபர் கே.கே.எஸ்.கே.ரபீக் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். 
நிகழ்வில் தொல்லியல் அறிஞர்களான கோவை ஒய்.சுப்பராயலு, ஈரோடு புலவர் செ.ராசு ஆகியோர் கெளரவிக்கப்படனர். இதில் சிந்துவெளி ஆய்வாளர், ஒடிசா மாநில அரசு தலைமை ஆலோசகர் ஆர்.பாலகிருஷ்ணன் பங்கேற்று "உயில் அல்ல உரிமை' என்ற தலைப்பில் பேசியதாவது:
கல்வியும், வரலாறும் உயில் அல்ல உரிமை. சங்க இலக்கிய காலத்திலேயே கல்வி என்பது பிறப்பிலேயே உரிமையாக வருவதை காண முடியும். இந்த உரிமையை வரலாற்றின் மூலமே அறிய முடிகிறது.
ஆதிச்சநல்லூரில் ஆரம்பத்தில் ஆங்கிலேயர் உள்ளிட்ட பலர் அகழ்வாராய்ச்சி நடத்தினர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகள் அங்கு ஆராய்ச்சி மேற்கொள்ளப்படவில்லை. 2004இல் அங்கு கண்டெடுக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட எலும்புக்கூட்டின்ஆய்வு முடிவு வெளியிடப்படவில்லை. தற்போது மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.
அதுபோல், கீழடியில் அமர்நாத் ராமகிருஷ்ணன் மேற்கொண்ட ஆராய்ச்சி, அமெரிக்கா வரை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பல முக்கியத் தரவுகளை தந்தது.
கீழடியில் உள்ள தமிழ் பிராமி எழுத்து 6 ஆம் நூற்றாண்டு காலத்தைச் சேர்ந்தது எனக் கண்டறியப்பட்டது. அதுபோல, சிந்து சமவெளியில் பல கீறல் கொண்ட எழுத்து கிடைத்தது. அம்மொழியை அறிய முடியவில்லை. ஆனால், அங்கு கிடைத்ததும், கீழடியில் கிடைத்த கீறலும் ஒன்று என்பதை காண முடிந்தது. இதன் மூலம் சிந்து சமவெளி காலத்திலேயே கீழடியுடன் உள்ள தொடர்பை உறுதிப்படுத்த முடிகிறது. கீறலில் துவங்கியதுதான் எழுத்து. எண்ணும், எழுத்தும் சரியாக உள்ள மொழியே சிறந்தது என்ற அடிப்படையில் தமிழ் மிகப் பழமையானது என்பதை அறிகிறோம். கடந்த 2,200 ஆண்டுகளுக்கு முற்பட்ட 432 பேரின் எழுத்து, கவிதை கிடைத்துள்ளது. அதில் 76 பேர் பெண்கள். அதில் ஒரு பெண் வெண்ணிகுயத்தியார் எனக் காண முடிகிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுவரை கிடைக்கப்பட்ட கல்வெட்டுகளை வகைப்படுத்தியபோது அதில் தமிழ் கல்வெட்டு 38,000, கன்னடம், 12,000, தெலுங்கு, 12,000, மலையாளம் 120, ஹிந்தி 200 என இருந்தது. தமிழகத்தில் பானைக் கீறல், தமிழ் பிராமி, கல்வெட்டு, ஓலைச்சுவடி என எழுத்துக்களில் படிப்படியான வளர்ச்சியை காண முடிகிறது. தமிழகத்தில் கல்வி பரவலாக்கத்தையும், உரிமையாக இருந்ததையும் உறுதி செய்ய முடிகிறது.
சமயங்களில் கூட 63 நாயன்மார்களில் பல சமூகத்தைச் சேர்ந்தவர்களும் இருந்துள்ளனர். அப்படியானால், அவர்கள் அனைவரும் கல்வி உரிமை, சமய வெளிப்பாட்டை விளக்கும் உரிமையைப் பெற்றவர்களாக திகழ்ந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது என்றார்.
முன்னதாக புலவர் செ.ராசு பேசியதாவது: 
உலகப் புகழ் பெற்ற கல்வெட்டுகளில் ஒன்றான அரச்சலூர் கல்வெட்டு 1960 இல் என்னால் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கல்வெட்டு இப்போது வரை உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ளது. 
தென்னிந்தியாவில் ஆயிரக்கணக்கான கல்வெட்டுகளில் நூற்றுக்கணக்கான எழுத்துகள் உள்ளன.  ஆனால், பழமங்கலத்தில் நடுகல்லில் பாடல் வடிவத்தில் ஒரு கல்வெட்டு உள்ளது. தென்னிந்தியாவிலேயே பாடல் வடிவிலான கல்வெட்டு எங்கும் இல்லை. 
நாட்டின் பெருமையை, மொழியை, இலக்கியத்தின் பெருமையை தெரியாமல் பட்டம் பெறுவது என்பது எப்படி சரியானதாக இருக்க முடியும்? வரலாற்றை மறக்கக் கூடாது, வரலாறை இளைஞர்கள் அறிந்து கொள்ள நூல்களைப் படிக்க வேண்டும் என்றார்.
பேராசிரியர் ஒய்.சுப்பராயலு பேசியது: 
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக கல்வெட்டியல் துறைக்கு பெருமை சேர்த்தது கொடுமணல். அங்கு பணியாற்றிய காலத்தில் புலவர் செ.ராசுவின் தூண்டுதல் காரணமாக தான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் கொடுமணல் அகழாய்வுக்கு இசைவு தெரிவித்து, 2 ஆண்டுகளுக்கு நிதி அளித்தது. 
கீழடி அகழாய்வு கவனத்துடன் மேற்கொள்ளப்படவில்லை என்ற வருத்தம் தொல்லியல் அறிஞர்கள் சிலரிடம் உள்ளது. அகழாய்வில் கிடைக்கும் பொருள்கள் கவனமாக கையாளப்படவில்லை எனவும் தெரியவந்துள்ளது.
தொல்லியல் துறையில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்களில் அனுபவம் பெற்றவர்கள் மிகவும் குறைவாக உள்ளனர். இதனால், அகழாய்வை முழுமையாக கண்காணிக்க முடியாத நிலை உள்ளது.  
கீழடி அகழாய்வு பணிக்கு நல்ல, அனுபவம் உள்ள இளைஞர்களை அரசு நியமிக்க வேண்டும். துறையில் உள்ள காலிப்பணியிடங்களை தகுதியானவர்களைக் கொண்டு நியமிக்க வேண்டும். அதன்மூலம் தமிழகத்தின் வரலாறு வெளிச்சத்துக்கு வரும் என்றார். 


தினமணியில் உதவி ஆசிரியராக பணியாற்றிய ஆர்.பாலகிருஷ்ணன்
தினமணியில் உதவி ஆசிரியராக இருந்து கொண்டே படித்து ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றதாக ஆர்.பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இதுகுறித்து நிகழ்வில் அவர் பேசியதாவது:
திண்டுக்கல் அருகே நத்தம் தான் என் ஊர். மதுரை தினமணியில் நான் உதவி ஆசிரியராக பணி செய்து கொண்டே ஐஏஎஸ் தேர்வுக்கு படித்தேன். தினமும் பேருந்து மூலம் வந்து செல்லும்போது ஐஏஎஸ் தேர்வுக்கு படிப்பேன். 
அந்த பேருந்தின் நடத்துநர், அவரது இருக்கையை எனக்கு ஒதுக்கி இடம் பிடித்து வைத்திருப்பார். நான் படிப்பதைப் பார்த்ததால் அவர் எனக்கு தினமும் அந்த உதவியை செய்தார். அவ்வாறு படித்துதான் நான் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்றேன் என்றார்.

புத்தகத் திருவிழாவில் இன்று
புத்தகத் திருவிழாவில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 10) மாலை 6 மணிக்கு நடைபெறும் சிந்தனை அரங்க நிகழ்வில், சென்னை எஸ்.பி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இசைக்கவி ரமணன் குழுவினரின் பாரதி யார்? என்ற இயல், இசை, நடனம் கலந்த வரலாற்று நாடகம் நடைபெறவுள்ளது. நாடக நிகழ்வுக்கு நடிகர் சிவக்குமார் தலைமை வகிக்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com