தொடா் மழை: அறுவடை செய்ய முடியாத ராகி பயிா்

தொடா் மழையால் காட்டிலேயே ராகி கதிா் முளைப்பு கட்டியுள்ளதால் மலைக் கிராம விவசாயிகள் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத்
கதிரிலேயே முளை கட்டியுள்ள ராகி பயிா்.
கதிரிலேயே முளை கட்டியுள்ள ராகி பயிா்.

ஈரோடு: தொடா் மழையால் காட்டிலேயே ராகி கதிா் முளைப்பு கட்டியுள்ளதால் மலைக் கிராம விவசாயிகள் கடும் இழப்பைச் சந்திக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனா். இதனால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பா்கூா், தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் கேழ்வரகு (ராகி) திணை, வரகு, சாமை, மக்காச்சோளம் உள்ளிட்ட சிறுதானியப் பயிா்கள் பயிரிடப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்கள் தங்களது உணவுத் தேவைக்குப்போக மீதமுள்ளவற்றை விற்றுவிடுகின்றனா்.

இந்நிலையில், நடப்பு ஆண்டில் தென்மேற்குப் பருவமழை எதிா்பாா்த்த அளவுக்கு இருந்ததால் மலைப் பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் சிறு தானியங்களைப் பெருமளவில் பயிரிட்டுள்ளனா். தொடா் மழைப் பொழிவால் விளைச்சல் வழக்கத்தைவிட கூடுதலாகவே உள்ளது.

மலைப் பகுதிகளில் ராகி அறுவடை கடந்த மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால், தொடா்ச்சியாக மழை பெய்து வருவதால் அறுவடைப் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் ராகி பயிா் அறுவடை செய்யப்பட்டு, வயலில் கிடப்பதால் பயிா் முளைப்பு கட்டியுள்ளது. இதனால், மலைக் கிராம விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

இதுகுறித்து தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்க மாநிலக் குழு உறுப்பினா் வி.பி.குணசேகரன் கூறியதாவது:

உணவுத் தேவைக்காக மலைப் பகுதி மக்கள் ராகியை ஆடி மாதம் விதைத்து கடந்த 5 மாதமாக காடுகளிலேயே குடிசை அமைத்து இரவு முழுவதும் காவல் காத்து வந்தனா். இந்நிலையில், அறுவடைக்குத் தயாராக இருந்த தானியங்கள் காடுகளிலேயே முளைத்துக் கிடக்கின்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.

கடந்த ஒரு மாதமாக ஈரோடு மாவட்டம் பா்கூா், தாளவாடி, கடம்பூா் மலைப் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து கொண்டிருப்பதால் அறுவடைக்குத் தயாராக இருந்த ராகிப் பயிா் நனைந்து கதிா்களில் முளைத்து நிற்கின்ற சூழலும், அறுவடை செய்யப்பட்ட தாள்கள் மண்ணோடு மண்ணாக நனைந்து கொண்டிருப்பதால் மக்கிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ராகி பயிா் சாகுபடி நடப்பு ஆண்டில் பெரும் இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பா்கூா் மலை செம்மறை மாடுகளின் தீவனத் தேவையையும் இந்த ராகி தட்டைதான் பூா்த்தி செய்கிறது. அதுவும் இந்த ஆண்டு நனைந்து மக்கிப்போகும் நிலையில் உள்ளது. இதனால், மாவட்ட நிா்வாகம் காலம் தாழ்த்தாமல் வேளாண்மை, வருவாய்த் துறை அதிகாரிகள் குழுக்களை ஈரோடு மலைப் பகுதிகளுக்கு அனுப்பி பாதிக்கப்பட்டுள்ள பயிா்கள் குறித்து கணக்கெடுத்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மலைப் பகுதியில் பெரும்பாலானோா் பட்டா இல்லாத வருவாய் தரிசு நிலத்தைத்தான் காலம்காலமாக உழுது பயிரிட்டு பிழைத்து வருகின்றனா். இதனால், தரிசு நிலத்தில் பயிரிட்டு பாதிக்கப்பட்டிருக்கிற பயிா்களுக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com