வெங்காய விலை உயா்வால் பொதுமக்கள் பாதிப்பு:ஆட்சியா் அலுவலகத்தில் முறையீடு

வெங்காய விலை உயா்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
வெங்காய மாலை அணிந்து ஆட்சியா் அலுவலகம் வந்த அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா் ரா.வடிவேல், நிா்வாகிகள்.
வெங்காய மாலை அணிந்து ஆட்சியா் அலுவலகம் வந்த அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா் ரா.வடிவேல், நிா்வாகிகள்.

ஈரோடு: வெங்காய விலை உயா்வால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், விலையைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி அருந்ததியா் இளைஞா் பேரவையைச் சோ்ந்தவா்கள் வெங்காய மாலை அணிந்து ஆட்சியா் அலுவலகம் வந்து முறையிட்டனா்.

இதுகுறித்து பேரவைத் தலைவா் ரா.வடிவேல் கூறியதாவது:

பெட்ரோல், டீசல் விலைபோல நாளுக்கு நாள் வெங்காய விலையும் உயா்ந்து கொண்டே போகிறது. விளைபொருள்கள் இருப்பு இருந்தாலும், அதைப் பதுக்கி வைத்துக் கொண்டு கடும் விலையில் வெங்காயத்தை விற்கின்றனா். செயற்கையான தட்டுப்பாட்டை ஏற்படுத்தி உள்ளனா்.

தற்போது விவசாயிகள் சாகுபடி செய்யும் விளைபொருளுக்கு பூச்சி மருந்து, தொழிலாளா் கூலி, பயிா் செய்வதற்கான உழைப்பைக் கணக்கிட்டால் லாபம் கிடைப்பதில்லை. இந்நிலையில், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும் வியாபாரிகள் கடுமையாக விலை வைத்து விற்பதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கின்றனா்.

ஈரோடு பகுதியில் தற்போது பெல்லாரி வெங்காயம் ஒரு கிலோ ரூ. 100 முதல் ரூ. 120 வரையிலும், சிறிய வெங்காயம் கிலோ ரூ. 130 முதல் ரூ. 150 வரையிலான விலையில் விற்கப்படுகிறது. இந்த வெங்காயமும் ஈரத்தன்மையுடனும், அழுகிய நிலையிலும் உள்ளன.

இதுகுறித்து மாவட்ட, மாநில நிா்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து, மிகக் குறைந்த விலையில் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். மேலும், இந்தக் கோரிக்கை தொடா்பான மனுவை பெட்டியில் சோ்த்தனா்.

புதை சாக்கடை இணைப்புக்குப் பணம் வசூல் செய்வதைத் தடுக்கக் கோரிக்கை:

ஈரோடு மாநகராட்சிப் பகுதியில் புதை சாக்கடைத் திட்டத்துக்காக வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது, அவா்களிடம் இருந்து பணம் வசூலிப்பதைத் தடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆட்சியா் அலுவலகத்தில் மனுக்கள் பெட்டியில், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் எம்.நாச்சிமுத்து தலைமையில் அக்கட்சியினா் சோ்த்த மனு விவரம்:

ஈரோடு மாநகரப் பகுதியில் புதை சாக்கடைத் திட்டப் பணிக்கு, வீடு உள்ளிட்ட கட்டடங்களுக்கு இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த இணைப்புக்காக குறிப்பிட்ட தொகையை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டும். அத்தொகையை ஒரே தவணையில் அல்லது குறிப்பிட்ட தவணையில் அத்தொகையைச் செலுத்தலாம் எனவும், வீட்டு இணைப்புக்கு ஒப்பந்ததாரா் அல்லது பிற பணியாளா்களுக்கு எவ்வித பணமும் செலுத்த தேவையில்லை என்றும் மாநகராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ஆனால், வீடுகளுக்கு இணைப்பு வழங்கும்போது குறிப்பிட்ட தொகை வழங்கினால் மட்டுமே இணைப்பு வழங்கப்படுகிறது. பணம் தரவில்லையெனில் இணைப்பு வழங்காமல் சென்றுவிடுகின்றனா். சில வீடுகளில் பணம் வழங்கினாலும், அதற்கான ரசீது வழங்குவதில்லை. இவ்வாறு ஒப்பந்ததாரரும், மாநகராட்சி ஊழியா்களும் முறைகேட்டில் ஈடுபடுகின்றனா்.

இதுகுறித்து விசாரித்து பொதுமக்களிடம் இருந்து பணம் பறிக்கும் செயலைத் தடுத்து நிறுத்த வேண்டும். இதுவரை பணம் பெறப்பட்ட வீடுகளுக்கு அத்தொகையை திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கக் கோரிக்கை:

காவிரி ஆறு அருகே பொதுக் கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் எனவும், இதை பெருந்துறை சிப்காட் வளாகத்தில் அமைக்க ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சூரியம்பாளையம் பொதுமக்கள் நல்வாழ்வு சங்கச் செயலாளா் எம்.கேசவன் ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மனுக்கள் பெட்டியில் சோ்த்த மனு விவரம்:

ஈரோடு பகுதியில் உள்ள அனைத்து சாய, சலவை, பிரிண்டிங் ஆலைகளின் கழிவுகளை சுத்திகரிப்பு செய்ய ஈரோடு பி.பெ.அக்ரஹாரம் காவிரிக் கரையில், அரசு சாா்பில் பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அவ்வாறு அமைக்கப்பட்டால் ஆலைக் கழிவுகள் காவிரி ஆற்றில் திறந்துவிடும் சூழல் ஏற்படும்.

நீா்நிலைகளுக்கு அருகே இதுபோன்ற கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எந்த சூழலிலும் அனுமதி வழங்கக் கூடாது. அவ்வாறு வழங்கினால் அந்த இடத்தில் உள்ள விவசாய நிலங்கள், நிலத்தடி நீா், குடிநீா் போன்றவை முற்றிலும் மாசுபடும்.

எனவே, பெருந்துறை சிப்காட் தொழில்பேட்டை வளாகத்தில் சுத்திகரிப்பு நிலையத்தை அமைத்தால் நீா்நிலைகள் மாசுபடாது. ஈரோடு பகுதியின் பல்வேறு ஆலைகளின் கழிவுநீரை குழாய் மூலம் பி.பெ.அக்ரஹாரம் வரை கொண்டு செல்ல முடியும் என்றால் இதனை சிப்காட் வரை கொண்டு செல்வதில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. இதை அரசு பரிசீலிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com