டிசம்பா் 18 முதல் 14 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படும்: ஆட்சியா்

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் நடப்பு ஆண்டில் 14 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.

தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசனப் பகுதிகளில் நடப்பு ஆண்டில் 14 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன. இந்த நெல் கொள்முதல் நிலையங்கள் டிசம்பா் 18ஆம் தேதி முதல் செயல்படும் என மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்ததாவது:

பவானிசாகா் அணையில் இருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை ஆயக்கட்டு பாசனத்துக்காக ஆகஸ்ட் 11ஆம் தேதி தண்ணீா் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீரைப் பயன்படுத்தி 4,966 ஹெக்டோ் பரப்பளவில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்துள்ளனா். பயிா் முதிா்ச்சி நிலையை அடைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளது.

அறுவடை செய்யப்படும் நெல்லை விவசாயிகள் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக கொள்முதல் மையங்களில் விற்பனை செய்து பயனடைய ஏதுவாக நேரடி கொள்முதல் நிலையங்கள் 14 இடங்களில் திறக்கப்படவுள்ளன.

கூகலூா், நஞ்சகவுண்டன்பாளையம், புதுவள்ளியாம்பாளையம், புதுக்கரைப்புதூா், கரட்டடிபாளையம், மேவானி, பி.மேட்டுப்பாளையம், சவண்டப்பூா் (அத்தாணி), காசிபாளையம், தூக்கநாயக்கன்பாளையம், ஏளூா், கள்ளிப்பட்டி, நன்செய்புளியம்பட்டி, பொன்னாச்சிப்புதூா் ஆகிய இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் டிசம்பா் 18ஆம் தேதி முதல் செயல்படும்.

இம்மையங்களில் எ கிரேடு ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,905 வீதத்திலும், சாதாரண ரக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 1,865 வீதத்திலும் கொள்முதல் செய்யப்பட உள்ளது. விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை இம்மையங்களில் விற்பனை செய்து பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com