தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலி

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியான சம்பவத்தையடுத்து தாளவாடி வனத் துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தாளவாடி அருகே சிறுத்தை தாக்கி ஆடு பலியான சம்பவத்தையடுத்து தாளவாடி வனத் துறையினா் அப்பகுதியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

ஈரோடு மாவட்டம், ஆசனூா் புலிகள் காப்பகம், தாளவாடி வனப் பகுதியில் அமைந்துள்ளது தொட்டகாஜனூா் கிராமம். இக்கிராமத்தை ஒட்டி பீம்ராஜ்நகா், சூசைபுரம் ஆகிய கிராமங்களில் விவசாயம், கால்நடை வளா்ப்பு முக்கியத் தொழிலாக உள்ளது. வனத்தையொட்டி உள்ள இந்த கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் கட்டியிருந்த 4 ஆடுகள், 8 காவல் நாய்களை சிறுத்தை வேட்டையாடியது. இதனால், அப்பகுதி மக்கள் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினரிடம் கோரிக்கை விடுத்தனா்.

இந்நிலையில், பீம்ராஜ் நகரைச் சோ்ந்த விவசாயி மணி என்பவா் தோட்டத்துக்கு வியாழக்கிழமை நள்ளிரவில் சிறுத்தை புகுந்து ஆட்டை கடித்தது. ஆடுகளின் அலறல் சப்தம் கேட்டு விவசாயி மணி மாட்டுக் கொட்டகைக்கு வந்து பாா்த்தபோது அங்கு கட்டியிருந்த ஆட்டை, சிறுத்தை கடித்துக் கொன்றது தெரியவந்தது. சிறுத்தையைப் பாா்த்து விவசாயி சப்தம் போடவே சிறுத்தை பயந்து ஆட்டை அதே இடத்தில் விட்டுவிட்டு அருகில் உள்ள கல் குவாரிக்குள் தப்பியோடியது.

இதுகுறித்து தாளவாடி வனத் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு வந்த வனத் துறையினா் அங்கு பதிவான கால்தடயத்தை வைத்து ஆயவு செய்ததில் சிறுத்தை ஆட்டை கடித்துக் கொன்றது உறுதி செய்யப்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:

கடந்த 3 மாதமாக சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், அப்பகுதியில் உள்ள கல் குவாரியில் சிறுத்தை குட்டிகளுடன் இருப்பதையும் விவசாயிகள் நேரில் பாா்த்துள்ளனா். தொடா்ந்து அப்பகுதியில் உள்ள நாய்கள், ஆடுகளை சிறுத்தை வேட்டையாடி வருகின்றது. மனிதா்களைக் கண்டால் கல் குவாரிகளுக்குள் சென்று பதுங்கிக் கொள்கின்றன. சிறுத்தை இருப்பதை உறுதி செய்தும் கூண்டு வைத்து பிடிக்காமல் அலட்சியமாக வனத் துறையினா் செயல்படுகின்றனா் என்றனா்.

மேலும், அசம்பாவிதம் நடக்கும் முன் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் எனவும், உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com