மொடக்குறிச்சி ஆரம்ப சுகாதார மருத்துவமனை தரம் உயர்த்தப்படும்: அமைச்சர் தகவல்
By DIN | Published On : 15th February 2019 09:36 AM | Last Updated : 15th February 2019 09:36 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை விரைவில் தாலுகா மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்படும் என மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ. சிவசுப்பிரமணி பேசியபோது, மொடக்குறிச்சி தொகுதிக்கு உள்பட்ட மொடக்குறிச்சி, கொடுமுடி ஒன்றியங்கள் தனி தனி தாலுகாக்களாக மாற்றப்பட்டுள்ளன. கொடுமுடி தாலுகாவில், தாலுகா மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. அதேபோல் மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு பதில் அளித்துப் பேசிய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தாலுகாவாக அறிவிக்கப்பட்ட அனைத்துப் பகுதியிலும் தாலுகா மருத்துவமனை ஏற்படுத்தப்பட்டுள்ளன. விரைவில் மொடக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.