இ-அடங்கல் மூலம் நகல் பெறும் நடைமுறை தொடக்கம்

அடங்கல் நகலை இ-அடங்கல் முறையில் (இணைய நிலப்பதிவேடு) மட்டுமே பெறும் நடைமுறை

அடங்கல் நகலை இ-அடங்கல் முறையில் (இணைய நிலப்பதிவேடு) மட்டுமே பெறும் நடைமுறை ஜூலை 1 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. இதனை உயரதிகாரிகள் கவனித்து தொடர் நடவடிக்கை மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 
ஒவ்வொரு நிலத்தின் தன்மை, தற்போது சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர், அதன் நிலை போன்றவற்றை, ஒவ்வொரு பருவத்திலும், ஒவ்வொரு ஆண்டிலும், கிராம நிர்வாக அலுவலர்கள் பதிவு செய்வார்கள்.
தவிர அந்த நிலத்துக்கான தீர்வைத் தொகை செலுத்தப்பட்ட விவரம் உள்ளிட்டவை பதிவு ஆகும். இவற்றை ஒவ்வொரு ஆண்டும் ஜமாபந்தியின்போது ஜமாபந்தி அலுவலர் ஆய்வு செய்து தணிக்கைச் சான்று வழங்குவார்.
அதன்பின் விவசாயி நிலத்தின் கடந்த ஆண்டு நிலை குறித்த அடங்கல் நகலை கிராம நிர்வாக அலுவலர் மூலம் பெறலாம். ஒவ்வொரு ஆண்டும் இதனை பதிவு புத்தகத்தில் எழுதி பராமரித்து வருவதை தவிர்க்கும் வகையில் இ-அடங்கல் என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
அடங்கல் இல்லாமல் பயிர்க் கடன், பயிர்க் காப்பீடு உள்ளிட்ட பெரும்பாலான பணிகள் செய்ய முடியாது. தவிர நாட்டின் விளைபொருள் உற்பத்தியையும் இதன் மூலம் கணக்கிட முடியும். இ-அடங்கல் செயலி மூலமே அடங்கல் நகல் பெற முடியும்.
இம்முறையால் வெகுதாமதம் ஏற்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். தவிர தங்களுக்கு இணையதளத்துக்காக அரசு சார்பில் பணம் வழங்குவதில்லை. தங்களால் இதுபோன்ற பணிகளை உடனுக்குடன் செய்ய இயலாது என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 
இதுகுறித்து மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.கவிதா கூறியதாவது: இந்த செயலி மூலம் இணைய நிலப் பதிவேடு பராமரிக்கப்படுகிறது. விவசாயி செய்துள்ள பயிர் சாகுபடி விவரம், புல எண், வகைப்பாடு, பயிர் வாரியாக அறியலாம். விவசாயிகள் ஆன்ட்ராய்டு செல்லிடபேசியில் கூகுள் பிளே ஸ்டோரில் இ-அடங்கல் செயலியை பதிவிறக்கம் செய்து செல்லிடபேசியில் உள்ளீடு செய்து பயன்படுத்தலாம். ஒவ்வொரு விவசாயிக்கும் தனியாக குடிமக்கள் கணக்கு எண் (சிஏஎன் எனப்படும் கேன் எண்) வழங்கப்படும்.இ-சேவை மையம் மூலம் அரசின் சேவைகளை, ஏற்கெனவே இணையதளம் வாயிலாக பெற்ற அனைவருக்கும் இந்த எண் வழங்கப்பட்டிருக்கும். இந்த எண் இல்லாவிட்டால் இ-சேவை மையங்கள் மூலம், புதிதாக பதிவு செய்யலாம். பின் தாங்கள் பயிர் செய்த விவரத்தை, புல எண், வகைப்பாடு, பயிர் வாரியாக அறியலாம்.
இந்த செயலியில் கிராம நிர்வாக அலுவலரும், விவசாயியும், தனது நிலத்தின் விவரம், சாகுபடியான பயிர் விவரத்தை பதியலாம். இதன் மூலம் தவறான தகவல் தவிர்க்கப்படும். செயலி மூலம் இஅடங்கல் நகல் கோரினால் உடனடியாக கிராம நிர்வாக அலுவலர் அதனை சரிபார்த்து அனுமதித்தால் அடுத்து வருவாய் அலுவலர் மற்றும் மண்டல துணை வட்டாட்சியர் அனுமதித்து சான்றை செயலி மூலமும், இணையதளம் வாயிலாகவும் பெறலாம்.
விவசாயி விண்ணப்பம் செய்தால் அந்த விவரத்தை வருவாய் ஆய்வாளர், துணை வட்டாட்சியர், வட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் வரை பார்க்கலாம். ஓரிரு நாளுக்கு மேல் தாமதம் ஏற்படும்போது உயர் அதிகாரிகள் உடன் தீர்வு காணும்படி பணிக்கலாம்.
ஒரு ஆண்டு முழுவதும் பதிவு செய்யப்படும் நிலப்புலன் விவரங்கள், ஜமாபந்தியின்போது தணிக்கை செய்து மாவட்ட வருவாய் அலுவலரின் அனுமதி வழங்கப்படும். விவசாயி விண்ணப்பம் அளித்தாலும் கடந்த ஆண்டு விவரம்தான் முதலில் கிடைக்கும்.
தற்போதைய விவரத்தை தனியாக பெறலாம். இதில் தாமதம் தவிர்க்க தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com