குடிநீர் கேட்டு கோபி அருகே சாலை மறியல்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம்

கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அளுக்குளி ஊராட்சிக்கு உள்பட்ட ஒட்டர்கரட்டுப்பாளையம்  கிராமத்துக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி பொதுமக்கள் காலிக் குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஒட்டர்கரட்டுப்பாளையம் கிராமத்தில் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அளுக்குளி ஊராட்சி சார்பில் ஆழ்துளை கிணறு அமைத்து  ஒரு சின்டெக்ஸ் தொட்டி அமைத்து இருதினங்களுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவகிறது. எனவே, ஆற்றுநீர் விநியோகம் செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள தண்ணீர்ப் பற்றாக்குறையால், ஆழ்துளை கிணறுகளில் தண்ணீர் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காக ஒரு கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீர் கொண்டு வருகின்றனர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் போதுமான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறி  ஒட்டர்கரட்டுப்பாளையம் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கோபி-கோவை பிரதான சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடத்தூர் போலீஸார், கோபிசெட்டிபாளையம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, குடிநீர் விநியோகம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டார வளர்ச்சி அலுவலர் சுமதி மற்றும் கடத்தூர் காவல் துறையினர் உறுதியளித்ததையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com