கோயில் திருவிழாவில் நாடகம் நடத்த எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
By DIN | Published On : 01st June 2019 08:54 AM | Last Updated : 01st June 2019 08:54 AM | அ+அ அ- |

கொடுமுடி அருகே கோயில் திருவிழாவில் ஒரு தரப்பினர் நாடகம் நடத்துவதற்கு எதிர்ப்பு மற்றொரு தரப்பினர் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கொடுமுடி எழுநூற்றிமங்களம் கிராமத்தில் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் சுயம்பு மாரியம்மன் கோயில் உள்ளது.
இந்தக் கோயிலில் அப்பகுதியில் உள்ள ராசம்பளையம் காலனியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய குப்பம்பாளையத்தில் உள்ள மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.
இதனால், கோயில் திருவிழா நடத்துவது தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு கோயில் திருவிழா நடத்துவது குறித்து இரு தரப்பினரையும் அழைத்து ஈரோடு வருவாய் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, இரு தரப்பினரும் சேர்ந்து அமைதியான முறையில் கோயில் திருவிழாவை கலைநிகழ்ச்சிகள் இல்லாமல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. இதில் உடன்படாத ஒரு தரப்பினர் அவர்களுக்குச் சொந்தமான இடத்தில் அம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மேலும், ராசாம்பாளையத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் காவல் துறையினரின் பாதுகாப்போடு மாவிளக்கு வைத்து பூஜை நடத்தினர். இந்நிலையில், ராசாம்பளையத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுகத்தினருக்குச் சொந்தமான மதுரைவீரன் கோயில் திருவிழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்போது, கோயிலில் காவல் துறையினரின் அனுமதியோடு நாடகம் நடத்த தயார் நிலையில் இருந்தனர்.
இதையடுத்து, சமூக நாடகம் நடத்துவதற்கு எழுநூற்றிமங்கள கிராமத்தில் உள்ள குப்பம்பாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த மற்றொரு சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து சாலலைப்புதூர் நான்கு வழிச்சாலையில் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து சம்பவம் இடத்துக்கு வந்த பெருந்துறை டி.எஸ்.பி.ராஜ்குமார் பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. மேலும், ராசாம்பாளயம் காலனியில் நடைபெற இருந்த நாடகம் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், ராசாம்பாளையம் காலனி மக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் நாடகம் நடத்த அனுமதி கேட்டு கொடுமுடி காவல்நிலையத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்டனர். கோயில் திருவிழா தகராறு தொடர்பாக ஈரோடு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதையடுத்து, சம்பந்தப்பட்ட கிராமங்களில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.