விவசாயத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுகிறது: இரா.முத்தரசன்

தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.

தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்படுவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டினார்.
ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பெரியபுலியூர் பகுதியில் தாராபுரத்திலிருந்து கிருஷ்ணகிரி வரை கொண்டு செல்லப்படும் 400 கிலோவாட் உயரழுத்த மின்பாதைக்கு மின் கோபுரம் அமைக்கும் பணியை தமிழ்நாடு மின்சார வாரியத்தினர் தொடங்கியுள்ளனர். வளையக்காரன்பாளையம் பகுதியில் இப்பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி விவசாயிகள், கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். அதைத் தொடர்ந்து 10-க்கும் மேற்பட்டவர்களை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் வளையக்காரன்பாளையத்தில் உயரழுத்த மின்கோபுரம் அமைக்கும் பணி நடைபெறும் இடத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், திருப்பூர் மக்களவை உறுப்பினர் கே.சுப்பராயன் ஆகியோர் வியாழக்கிழமை பார்வையிட்டனர். பின்னர் விவசாயிகள்,  கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் இரா. முத்தரசன் கூறியதாவது:
தமிழகம் முழுவதும் விவசாயத்துக்கு எதிராக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மின் கோபுரங்கள் அமைக்கப்படும் இடங்களில் விவசாயிகளிடம் முன் அனுமதி பெறுவதில்லை. உரிய இழப்பீடுகளும் வழங்குவதில்லை. 
விவசாயிகளை நிலத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டுள்ளன. அரசு நேர்மையான முறையில் போராட்டக் குழுவினரை அழைத்துப் பேசி தீர்வு காண வேண்டும். இல்லாவிட்டால் பல்வேறு போராட்டங்களை நடத்துவோம். எட்டு வழிச் சாலைத் திட்டத்தை ஐந்து மாவட்ட விவசாயிகள் எதிர்க்கின்றனர் என்றார்.
மக்களவை உறுப்பினர் சுப்பராயன் கூறியதாவது:
விவசாயத்தை அழிக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. உயர் மின் கோபுரம் அமைக்கும் பணியைத் தடுத்து நிறுத்த அனைத்து விவசாயிகளும் ஒன்றிணைந்து போராட வேண்டும். இதுதொடர்பாக மக்களவையில் குரல் கொடுப்போம் என்றார்.
இந்நிகழ்வின்போது கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் முனுசாமி, குணசேகரன், பரமேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com