ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது எடுத்த நடவடிக்கையை அரசு கைவிடக் கோரிக்கை
By DIN | Published On : 24th June 2019 08:22 AM | Last Updated : 24th June 2019 08:22 AM | அ+அ அ- |

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீதான அனைத்து நடவடிக்கையும் அரசு கைவிட வேண்டும் என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இச்சங்கத்தின் மாவட்ட மாநாடு, கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விழா, ஓய்வு பெற்ற நிர்வாகிகளுக்குப் பாராட்டு விழா என முப்பெரும் விழா ஈரோட்டில் சனிக்கிழமை நடைபெற்றன. விழாவுக்கு மாவட்டத் தலைவர் மூர்த்தி தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் திருவரங்கன், செயலாளர் பாஸ்கர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மு.பாலகணேஷ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று பேசினார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வட்டார அளவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் தனிக்கட்டமைப்பினை ஏற்படுத்தி, வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பணி மேற்பார்வையாளர் பணியிடங்களைப் புதிதாக உருவாக்க வேண்டும். தமிழகத்தில் பரப்பளவிலும், மக்கள் தொகை அடிப்படையிலும் பெரிதாக உள்ள ஊராட்சி ஒன்றியங்கள், ஊராட்சிகளை நிர்வாக நலனை முன்னிட்டு புதிதாக பிரித்து, புதிய ஊழியர் கட்டமைப்பினை ஏற்படுத்த வேண்டும். ஊராட்சி ஒன்றியங்களில் ஒரு மண்டலத்துக்கு ஒரு பணி மேற்பார்வையாளர் என்ற விகிதத்தில் பணியிடம் ஏற்படுத்தி தர வேண்டும்.
ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்களின் மீதான அனைத்து நடவடிக்கையும் அரசு கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொருளாளர் சிவசங்கர், ஒருங்கிணைப்பாளர் பாவேசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.